அறிமுகங்கள் முடிந்த நிலையில் எங்கள் பேச்சு வேறு திசையில் சென்றது. இறையியல் பாடத்திட்டம் குறித்து தொடங்கிய விவாதம், கேரள மாநிலத்தில் உருவான விடுதலை இறையியல் (Liberation Theology) நோக்கி திரும்பியது.
அப்போது எனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்:
கடவுள்தான் உலகையும், மற்ற அனைத்தையும் படைத்தார் என்றால் உலகில் உள்ள சமத்துவமற்ற நிலைக்கும் அவர்தான் பொறுப்பு! இந்த சமத்துவமற்ற நிலையே அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் என்றால், இந்த சமத்துவமற்ற நிலையை உருவாக்கி, பாதுகாத்து வரும் கடவுளின் விருப்பம் அதுதான்!!
இந்த நிலையில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமூகத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரான செயல் அல்லவா? கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?? கடவுளை ஏற்றுக்கொள்பவர்கள் எந்த நோக்கத்திற்காகவும் கடவுளை தொழலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால் நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது அல்லவா? என்று கேட்டேன்.இது போன்ற விவாதங்கள் தாம் பயிலும் கல்வி நிலையத்திலும் அவ்வபோது நடைபெறுவதாகவும், இதுவரை இந்த கேள்விக்கான பதில் கிடைக்கப்பெறவில்லை என்றும் தோழி அனிதா கூறினார். எனினும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்தால் உடன் தொடர்பு கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.
-000-
உலகம் முழுவதும் மனித உரிமைத்தளங்களில் மிக அதிக அளவில் செயல்படுவது கிறித்துவ மதம் சார்ந்த அமைப்புகளும், நபர்களுமே. மிகப்பெரிய மனித உரிமை அமைப்புகள் கிறித்தவ மத நிறுவனங்களின் நிதி உதவி மற்றும் ஆலோசனை அல்லது கட்டளைப்படிதான் நடக்கின்றன.
தற்போது இஸ்லாம் மதத்தினரும் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால் அது சற்று வேறு விதத்தில் அமைந்துள்ளது.
கிறிஸ்தவர்கள் பேசும் மனித உரிமைகள், கடவுள் மறுப்பாளர்களின் உரிமையையும் உள்ளடக்கியதாக தோன்றுகிறது. உலக அரசியல் சூழலில் இந்த கருத்தே, ஐக்கிய நாடுகளின் கருத்தாகவும் உள்ளது. ஆனால், இஸ்லாமியர்கள் பேசும் மனித உரிமைகளோ மதம் சார்ந்த நபர்களின், மத நம்பிக்கையிலேயே அதிக கவனம் செலுத்துகிறது.கிறித்தவ மதம் இந்தியாவில் ஊடுருவி பரவ ஆரம்பித்த நிலையில், விவேகானந்தர் போன்றவர்கள் இந்து மதத்திலும் சமூக நோக்கை சேர்த்து புதிய பரிமாணங்களை ஏற்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் அடிப்படையில் அனைத்து மதங்களுமே கடவுள்தான் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்தார். அவரது விருப்பப்படியே இந்த உலகிலுள்ள அனைத்தும் நடந்தேறுகிறது. என்று நம்புகின்றனர்.
எனில் ஒடுக்குபவனை படைப்பவனும், ஒடுக்கப்படுபவனை படைப்பவனும் கடவள்தான். கடவுளின் சித்தப்படியே ஒடுக்கப்படுபவன் தலித்தாக, சிறுபான்மையினராக, ஏழையாக, படிப்பறிவற்றவனாக, திருநங்கையாக, கருப்பினத்தவராக பிறக்கின்றனர்.

அதேபோல கடவுள் சித்தப்படியே மற்றோர் பிரிவினர் உயர் குலத்தவராக, வெள்ளைத்தோல் படைத்தவராக, பெரும்பான்மையினராக, செல்வந்தராக, படிப்பறிவுள்ளவராக, ஆதிக்க சக்தியினராக பிறந்து மற்றவர்களை ஆதிக்கம் செய்கின்றனர். இவர்களே அரசையும், வணிக நிறுவனங்களையும் உருவாக்கி பயன்படுத்தி, நமது மதம் சார்ந்த சமூக சேவையாளர்கள் மனம் நோகும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆக மொத்தத்தில் அனைத்தும் கடவுள் சித்தத்தாலேயே நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு அது கடவுள் வைக்கும் சோதனை. அதனை மீறி அவர் கடவுளுக்கு விசுவாசமாக இருந்தால், அவர்களுக்கு கடவுள் முக்தியை கொடுப்பார்.

ஆனால், கடவுளின் சித்தத்தின்படி துன்பங்களை அனுபவிப்பவர்களை மனித உரிமைகள் என்ற பெயரில் அந்த துன்பங்களிலிருந்து விடுவிக்க முனைவது கடவுளின் சித்தத்திற்கு எதிரான செயல் அல்லவா? அல்லது கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?
துன்பப்படு்ம் மனிதர்கள் மீது அக்கறை கொள்ளும் மத நம்பிக்கையாளர்கள், அந்த துன்பங்களை விலக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம். அதற்கு பதிலாக நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது ஏற்புடையதுதானா?
-என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நன்கு அறிமுகமான சிலரிடம இது குறித்து கேட்டபோது, எனக்கு பைத்தியம் பிடித்திருக்குமோ??!! என்ற சந்தேகத்துடன் விலகி விட்டனர்.
என் கேள்வியில் உள்ள நியாயத்தை தோழி அமுதா மன்னிக்கவும் அனிதா புரிந்து கொண்டார் என்று கருதுகிறேன். மேலும் இதுபோன்ற கேள்விகள், மதபோதகர்களுக்கான பள்ளி வரையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது என்ற தகவலும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.-000-
என் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், ப்ளீஸ்...!




