29 அக்டோபர், 2009

சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...

கன்னட நடிகரான ராஜ்குமாரை, தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள அவரது பங்களாவிலிருந்து 2000ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி சந்தனக்கடத்தல் வீரப்பன் கடத்தியிருந்தார். இது இரு மாநில அரசியலிலும் அதிர்வலைகளை எழுப்பியிருந்தது.

அப்போது நான் திருச்சியில் ஒரு நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். நடிகர் ராஜ்குமார் கடத்தல் குறித்து திருச்சியிலிருந்து செய்தியாளர்களை அனுப்புவதற்கு நான் பணியாற்றிய நிறுவனம் ஏற்பாடுகளை செய்தது. நிறுவனத்திற்கும், நிர்வாகத்திற்கும் மிகவும் வேண்டப்பட்ட ஒரு நிருபர் அந்தப் பணிக்காக நியமிக்கப்பட்டார். நான் எதிர்பாராதவிதமாக நானும் அவருடன் செல்லவேண்டும் என்று கூறப்பட்டது.

ஹிந்து நாளிதழில் மதுரை, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனரும், வழக்கறிஞருமான ஹென்றி திஃபேனின் பேட்டியை படித்ததன் மூலமும், அதைத் தொடர்ந்து மதுரையில் அவரை நேரில் சந்தித்து உரையாடியதன் மூலமும், பிறகு மேட்டூர்-கொளத்தூர்-சின்ன தண்டா-பெரிய தண்டா போன்ற பகுதிகளில் நான் சுற்றி விசாரித்ததையும் அடு்த்து வீரப்பனை தேடுவதாகக்கூறி சென்ற கர்நாடக-தமிழ்நாடு கூட்டு அதிரடிப்படையின் அராஜக செயல்பாடுகள் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன்.


எனவே வீரப்பன் பகுதிக்கு செல்வதற்கு நானும் ஆர்வத்துடன் சம்மதித்தேன். பேஜர் என்ற தகவல் தொழி்ல்நுட்ப கருவி விடைபெற்று செல்போன்கள் அறிமுகம் ஆகியிருந்த காலம் அது. செல்போனில் இன்கமிங் காலுக்கே 4 ரூபாய் வரை கட்டணம் செலுத்திய காலம்!

இரண்டு செய்தியாளர்கள் மற்றும் ஒரு புகைப்படக்காரர் ஒரு குழுவாக வாடகைக்கார் ஒன்றில் வீரப்பனை தேடிச்சென்றோம்.
அப்போது வீரப்பனை சந்திக்கும் வாய்ப்பு நக்கீரன் குழுவினருக்கு மட்டுமே இருந்தது. நான் பணியாற்றும் நிறுவனத்தின் பெயரைச் சொன்னால் எங்களை சந்திக்க வீரப்பன் நிச்சயமாக சம்மதிக்க மாட்டார் என்பது தெரிந்தாலும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட நாங்கள் தயங்கவில்லை.


சத்தியமங்கலம் பகுதியில் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுவிட்டு, இரவு-பகலாக வனப்பகுதிகளில் காரில் சுற்றி்த் திரிந்தோம். திம்பம், தாளவாடி, பவானி சாகர், தெங்கு மராடா, தொட்டகாஜனூர் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றினோம். ஊட்டியை மிஞ்சும் குளிரையும், மாசுபடாத காற்றையும் அனுபவித்தோம். சாதாரண காலத்தில் எளிதாக போகமுடியாத வனப்பகுதிகளில் மிக எளிதாக சுற்றினோம்.

தாளவாடியில் இருந்த பாழடைந்த சுற்றுலா மாளிகையில் அறை போட்டுவிட்டு அங்கிருந்த மதுபானக்கடையில் (செய்திக்காக) சுற்றித் திரிந்தோம். அப்போது ஏராளமான தாடியுடன் இருந்த ஒரு நபர் எங்களை அணுகினார். இரு தரப்பிலும் மிகவும் கண்காணிப்புடன் எதிர்தரப்பினரை ஆழம் பார்த்தோம். பிறகு அவர் க்யூ பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்பதை தெரிந்து கொண்டோம். அவரது பெயர் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவருடைய பெயர் என்று நினைவு. நாங்கள் யார் என்பதையும் அவர் தெரிந்து கொள்ளவே தேவையற்ற ஒரு நெருக்கம் உருவாகியது.

என்னுடன் வந்திருந்த மூத்த நிருபர் க்ரைம் பீட் என்ற குற்றம் சார்ந்த செய்திகளை சேகரிக்கும் பணியில் இருந்தவர். எனவே காவல்துறை அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருப்பது அவருடைய பார்வையில் நன்மையாகவே தோன்றியது. ஆனால், நான் அப்போது சட்டத்தில் இளநிலையும் மற்றும் மனித உரிமைகளில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்துக்கொண்டிருந்ததால் காவல்துறையினருக்கு எதிரான கருத்துகளை கொண்டிருந்தேன். மேலும் காவல்துறை அதிகாரியின் தொடர்பு என்பது செய்தி சேகரிக்கும் வேலைக்கு எந்த விதத்திலும் உதவாது என்பதுடன், எங்கள் பணிக்கு எதிரான விளைவுகளைத் தரலாம் என்றும் நினைத்தேன்.

எதிரெதிர் கருத்துகளை கொண்ட நிருபர்கள் இருவரும் நடத்திய பனிப்போரை எங்களுடன் வந்த புகைப்படக்காரர் ரசித்துக் கொண்டிருந்தார். இதற்குள் அந்த காவல்துறை அதிகாரி அவர் செல்ல வேண்டிய பகுதிகளுக்குள் எங்களை திணித்துக்கொண்டு அவரும் உடன் வந்து கொண்டிருந்தார்.

இதற்கிடையில் நாங்கள் பவானி சாகர் காவல்நிலையத்தில் வீரப்பனின் கூட்டாளியான சந்திர கவுடா என்பவரின் புகைப்படத்தை கண்டெடுத்தோம். அங்கு பெற்றுக்கொண்ட சில தகவல்களின் மூலம் சந்திர கவுடாவின் சொந்த ஊரையும் தெரிந்து கொண்டோம். அடுத்த நாள் அங்கிருந்தோம்.


அந்த ஊரில் ஒரு கோவில் இருந்தது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கூரை வீடு. அதில் ஒரு மூதாட்டி. அவர்தான் சந்திர கவுடாவின் தாயார்!

எங்கள் கேள்விகளுக்கு விட்டேத்தியாக பதில் சொன்னார். சந்திர கவுடா வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகவும், அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாதென்றும் கூறினார். மேலும், சந்தன வீரப்பனின் கூட்டத்தில் சேர்ந்து விட்டதாக காவல்துறை கூறித்தான் தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

எங்களுடன் வந்திருந்த காவல்துறை அதிகாரிக்கோ சந்திர கவுடா அந்த கூரை வீட்டுக்குள் ஒளிந்திருக்கலாம் என்று சந்தேகம். எனவே அந்த மூதாட்டியிடம் பல்வேறு விதமாக பேச்சுக்கொடு்த்து வீட்டுக்குள் நோட்டம் விட்டார். சந்திர கவுடா இருந்தால் அவரை சுட்டாவது பிடிக்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது நடந்துவிட்டால் ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தி கிடைக்குமே என்பது என்னுடன் வந்த நிருபரின் எண்ணம். ஆனால் காவல்துறையின் ஆட்காட்டியாக செய்தியாளர்கள் மாறிவிடக்கூடாது என்று நான் விரும்பினேன். எனவே எங்களால் சந்திரகவுடா சிக்கக்கூடாது: அதை தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதை உணர்ந்து கொண்ட புகைப்படக்காரர் நெளியத் தொடங்கினார். என்னிடம் சாடையில் எதையோ உணர்த்த முயன்றார். ஆனால் நான் அதை கேட்கும் நிலையிலோ, பரிசீலிக்கும் நிலையிலோ இல்லை. என் முடிவில் உறுதியாக இருந்தேன். எனவே புகைப்படக்காரரை பார்ப்பதையே தவிர்த்துவிட்டேன். அன்றைய நிலையில் நான் உயிர் விளையாட்டுக்கே தயாராக இருந்தேன் என்றே சொல்லலாம்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நாங்கள் அப்பகுதியில் இருந்தாலும், அந்த குடிசை வீட்டினுள் நுழைய சந்திர கவுடாவின் தாய் இடம் கொடுக்கவில்லை. வீட்டினுள் வேறு யாரும் இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை எனத் தெரிந்தது. காவல்துறை அதிகாரியும், என் சக நிருபரும் ஏமாற்றத்துடனும், நான் மகிழ்ச்சியுடனும், புகைப்படக்காரர் நிம்மதியுடனும் அங்கிருந்து கிளம்பினோம்.

என் மனநிலையை புரிந்து கொண்ட காவல்துறை அதிகாரி என்னிடம் பேசத்தொடங்கினார். வீரப்பனும், அவரது கூட்டாளிகளும் சட்டத்தின் முன் குற்றவாளிகள் என்றும் அவர்களை பிடிக்க உதவி செய்வதுதான் ஒரு சட்டம் படிக்கும் குடிமகனின் கடமை என்றும் கூறினார்.

அதை ஏற்றுக்கொண்ட நான், செய்தியாளர்களுக்கு என்று தொழில் சார்ந்த அறங்கள் உள்ளன: அதன்படி காவல்துறையினருக்கு ஆட்காட்டியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றேன். இந்த வீரப்பன் தனியாக சந்தன மரங்களையும், யானைத்தந்தங்களையும் கடத்தியிருக்க முடியாது. காட்டில் இருக்கும் வீரப்பனுக்கு நாட்டில் இருக்கும் பலர் உதவி இருப்பார்கள். அவர்களில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் குறித்து நீங்கள் என்ன விசாரணை நடத்தினீர்கள். அவர்களையும் சுட்டுத்தள்ளுவீர்களா? என கேள்வி எழுப்பினேன்.

என்னுடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும் இந்த விவாதம் மேலும் சூடுபிடிக்காமல் திசை திருப்பினர். பிறகு நடந்த பேச்சில் அந்த காவல்துறை அதிகாரி நேர்மையானவர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அவரது உயிரை பணயம் வைத்த கதையொன்றை அவர் சொன்னார்.

...தொடரும்

தொடர்புடைய பதிவுகள்:

சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!

18 அக்டோபர், 2009

தமிழ் மீடியா உலகம் – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் (2)

(இக்கட்டுரை தொடரின் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் இடையே பெரும் இடைவெளி விழுந்து விட்டது. இதற்குள் தமிழ் மீடியா உலகில் சில-பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மிகப்பெரும் முதலீட்டுடன் புதிதாக ஒரு இதழ் வெளியாகியுள்ளது. ஒரு புலனாய்வு இதழின் பொறுப்பாசிரியர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.)

மீடியாக்களில் வெளியாகும் செய்திகளின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் அளவில் வாசகர்-பார்வையாளர்களின் நிலை மேம்பட்டுள்ளது என்பதை பார்த்தோம். ஆனால் மீடியாவுடன் உறவு கொள்வதில் தமிழ் மீடியா வாசகர்-பார்வையாளர்கள் தேவையான அளவு செயல்படவில்லை என்றே கூற வேண்டும். மீடியா மீதான விமர்சனங்களை வைப்பதில் தமிழ் மக்கள் செயற்படுவதில்லை. குறிப்பாக குறைகளை சுட்டிக்காட்டுவதில் தமிழர்கள் மிகவும் சோர்ந்தே இருக்கின்றனர். பத்திரிகைகளில் தமது பெயர் அச்சாகி வருவதை பார்க்க விரும்பும் வாசகர்கள், பத்திரிகையை புகழ்ந்து எழுதுகின்றனர். ஆனால் விமர்சனம் செய்பவர்களோ அதை கடிதமாக எழுதி பதிவு செய்ய தயங்குகின்றனர்.

இந்நிலை மாற வேண்டும். உண்மையான விமர்சனக் கடிதங்கள் அச்சில் வராமல் போகலாம். ஆனால் அவை உரியவர்களின் கவனத்திற்கு நிச்சயம் சென்றுவிடும். இத்தகைய விமர்சனங்கள் அதிகரிக்கும்போது அவை மீடியாக்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவது உறுதி.

---

நடுநிலை ஊடகங்கள் என்ற சொல்லே மிகவும் நகைச்சுவையானது. ஏனெனில் நடுநிலை என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. ஒரு பிரசினையில் பாதிக்கப்பட்டவருக்கும், பாதிப்பை ஏற்படுத்தியவருக்கும் இடையில் நடுநிலை வகிக்க முடியாது. பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடும், பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனையும் வழங்குவதே நீதியாகும். எனவே நடுநிலை என்பது பாதிக்கப்பட்டவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

---

மேற்கண்ட நிலைப்பாட்டின்படி தமிழ்நாட்டில் மக்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ளும் மீடியா நிறுவனங்களை பட்டியலிடும் பொறுப்பை இந்த பதிவை படிக்கும் உங்களிடமே ஒப்படைக்கிறேன்.

---

மீடியாக்கள் தவறு செய்யும்போது வாசகர்களின் கோபம் பத்திரிகையாளர்கள் மீதுதான் திரும்புகிறது. ஆனால், உண்மையில் அந்த கோபத்திற்கு உரியவர்கள் பத்திரிகையாளர்கள் மட்டும் அல்ல. மீடியா நிறுவன அதிபர்களுக்கு இந்த தவறுகளுக்கு கூடுதல் பொறுப்புகள் உள்ளன. ஏனெனில் மீடியா அதிபர்களின் கருத்துக்கு உடன்படாத எந்த கருத்தையும் எந்த பத்திரிகையாளனும் பதிவு செய்ய முடியாது.

எனவே மீடியாக்கள் தவறு செய்யும்போது அதன் அதிபர்கள்தான் அந்த தவறுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால் எந்த அதிகாரமும் இல்லாத பத்திரிகையாளனை தண்டிப்பதின் மூலம் பிரசினைக்கு தீர்வு காணப்படுகிறது.

அண்மையில் நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் தினமலர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் உள்ள ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்தன. ஆனால் முக்கியமான ஒரு அம்சம் இந்த விவாதத்தில் இடம் பெறவில்லை.

சட்டப்படி ஒரு பத்திரிகையில் தவறான சமூகத்திற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய கருத்தோ, செய்தியோ வெளியானால் அந்த பத்திரிகையின் அதிபரும், ஆசிரியரும்தான் பொறுப்பாக வேண்டும். அவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆனால் தினமலர் விவகாரத்தில் ஆசிரியர் குழுவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்திற்கு சட்டப்படி பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து பத்திரிகையாளர்கள் சிலர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சிகளில் தினமலர் பத்திரிகையின் செய்தியாளர்களே சற்று ஒதுங்கி நின்றனர்.

---

பொதுப்பிரச்சினைகளை தமிழ் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் விதம் மிகவும் சுவாரசியமானது. இது மீடியா நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த உளவியல் ஆய்வாக அமையும்.

ஒரு பத்திரிகையாளர் அவரது தொழில்ரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அவருக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவருக்கு மற்ற பத்திரிகையாளர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். ஆனால் அது நடப்பதில்லை.

பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் பணியாற்றும் நிறுவனத்தைப் பொறுத்தே மற்ற பத்திரிகையாளரின் ஆதரவு பாதிக்கப்பட்டவருக்கு கிடைக்கும். உதாரணமாக சந்தனக் கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது அரசு நடவடிக்கை பாய்ந்தபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.

ஆனால் வேறொரு விவகாரத்தில் சன் டிவியின் செய்தியாளர் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிரான கிளர்ச்சிகளில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் இந்த இரண்டு கிளர்ச்சிகளில் மட்டுமல்ல. வேறு எந்த பொதுப்பிரச்சினைகளிலும் தினத்தந்தியின் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டதில்லை. அந்த நிறுவனமும் அதை விரும்புவதில்லை. தினத்தந்தியின் செய்தியாளர்கள் பத்திரிகையாளர் அமைப்புகளில் உறுப்பினராகக்கூட இருப்பதில்லை. ஆனால் தினமலர் பத்திரிகையில் இருந்து சிலர் இந்த கிளர்ச்சிகளில் கலந்து கொண்டனர். அதற்கு பரிசாக அவர்களுக்கு, கிளர்ச்சியில் கலந்து கொண்டதற்கு விளக்கம் கேட்கும் மெமோக்கள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுதான் பத்திரிகையாளர்கள் மற்றும் மீடியா நிறுவனங்களின் நிலை.

இத்தகைய சூழலில்தான் தினமலர் செய்தியாளரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில பத்திரிகையாளர்கள் கிளர்ச்சி செய்தபோது, தினமலர் செய்தியாளர்களே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த கதை நடந்தது.


-தொடரும்...


தொடர்புடைய பதிவுகள்:

1. தமிழ் மீடியா உலகம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் (1)