01 நவம்பர், 2009

(சந்தன) வீரப்பனோடு ஒரு கண்ணாமூச்சி!

[முதல் இரண்டு பதிவுகளையும் படித்துவிட்டு இந்தப்பதிவை படித்தால் முழுமையாக புரியலாம்! :)
1. சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை...
2. சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!]

வீரப்பனை தேடி நாங்கள் அந்த வனப் பகுதியில் சுற்றியபோது பலரும் எங்களிடம் இயல்பாக பேசுவார்கள், நாங்கள் வீரப்பன் பேச்சை எடுக்காதவரை. வீரப்பனின் பெயரை நாங்கள் உச்சரித்துவிட்டால் அவர்கள் ஊமைகளாகி விடுவார்கள். என்னுடன் வந்த நிருபருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதிரடிப்படையின் அட்டூழியங்களை அறிந்திருந்த எனக்கு அப்பகுதி மக்களின் போக்கை புரிந்து கொள்ளமுடிந்தது.

அப்பகுதியில் உள்ள மிகச்சிலர் வீரப்பன் குறித்து நாங்கள் விசாரிக்கும்போது, பெரியவர் இங்கெல்லாம் வர்றதே இல்லைங்க என்றனர். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுத்தால் வீரப்பன் நடமாட்டம் இருக்கும் பகுதியாக சில பகுதிகளை சொல்வார்கள். எங்கள் காரில் எங்களுடன் வருவார்கள். அடர்ந்த காடுகளில் சில பகுதிகளை பார்ப்போம். நள்ளிரவில் சாலை வசதி உள்ள வனப்பகுதிகளில் இலக்கின்றி அலைந்ததும் உண்டு.

வீரப்பனை தேடுவதற்காக அப்பகுதியில் முகாமிட்டிருந்த க்யூ பிரிவு அதிகாரி எங்களுடன் இணைந்தபோது, எங்களுடன் தொடர்பில் இருந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் திடீரென்று காணாமல் போய்விட்டனர். ஆனால் அந்த காவல்துறை அதிகாரியுடன் சுற்றியதில் அந்த பழங்குடிகள் காணாமல் போயிருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. இப்போது அந்த காவல்துறை அதிகாரி எங்களைவிட்டு பிரிந்து சென்றவுடன், காணாமல் போயிருந்த பழங்குடிகள் தாங்களாகவே எங்களைத் தேடி வந்தனர்.

மீண்டும் அவர்கள் மூலம் வீரப்பனை அணுக முயற்சித்தோம். அவர்களும் எங்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு இடத்தினை சொல்லி, அப்பகுதியில் பெரியவர்நடமாட்டம் இருப்பதாக கூறினர். நாங்களும் சளைக்காமல் அப்பகுதியில் தனியாகவோ, அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடனோ சுற்றினோம்.

திடீரென ஒரு நாள், ஏதோ ஒரு ஊரில் வீரப்பன் இருப்பதாக ஒரு சோர்ஸ் தகவல் கொடுத்தார். மேலும் தானும் உடன் வருவதாகவும், வீரப்பன் அங்கு இருந்தால் சந்திக்க உதவி செய்வதாகவும் கூறினார். உடனே கிளம்பினோம். அனேகமாக அது பன்னாரி மாரியம்மன் கோவிலில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் மலைப்பாதையில் மேலே ஏறாமல், வலது புறம் செல்லும் பகுதியாக இருக்க வேண்டும். கார் செல்லக்கூடிய பாதை இல்லாததால், நடந்து செல்ல முடிவெடுத்தோம். ஒற்றையடிப்பாதையில் சில கிலோ மீட்டர்கள் சென்றபின் ஒரு இடத்தில் சற்று தண்ணீர் தேங்கியிருந்தது. முகம் கழுவச் சென்றோம். ஈரமான மனித காலடித்தடங்கள் தெரிந்தன.

மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு! ஒரு வேளை வீரப்பன்தானோ. திருச்சியில் இருந்து சென்றிருந்த டிரைவர் உட்பட நான்கு பேரும் ஓரளவு வாட்ட சாட்டமாக, ஏறக்குறைய காவல்துறையினர் போலவே இருப்போம். எனவே சந்தேகப்பட்டு வீரப்பன் சுடலாம். அல்லது அருகே சென்றதும் நாங்கள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் கேட்டதும் வீரப்பன் சுடலாம் என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் அலைமோத, தொடர்ந்து நடந்தோம்.

திடீரென ஒரு கட்டத்தில் எங்களைச் சுற்றி மலைகள் இருப்பதை உணர்ந்தோம். நடுவே பள்ளத்தாக்கு போன்ற பகுதியில் நாங்கள் நிற்பதை புரிந்தது. மேலும் சுற்றியுள்ள மலைகளில் மரங்களுக்கு இடையே சில அசைவுகள் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது. உடன் வந்த புகைப்படக்காரரிடம் அதை தெரிவித்தேன். அவருக்கும் அதே உணர்வு. அதை எங்களோடு வந்த அப்பகுதி நண்பரிடம் கூறியபோது, அவரும் கவனித்ததாக கூறினார். மேலும் ஏதோ நடமாட்டம் இருப்பதை உறுதியும் செய்தார்.

அப்போது வரக்கூடாத சில நினைவுகள் வந்தன. காவல்துறையினரையும், காவல்துறையினரின் உளவாளிகள் என்று சந்தேகப்படுவோரையும் வீரப்பன் இதுபோன்ற தனியான இடத்திற்கு வரச்சொல்லி தீர்த்துக்கட்டியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது. எங்களோடு சுற்றிய அப்பகுதிவாசிகளும், வீரப்பன் காவல்துறையினரையும், உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரையும் இங்குதான் தீர்த்துக்கட்டினார் என்று கூறி சில இடங்களை காட்டுவதுண்டு. ஒரு வேளை எங்களையும் தீர்த்துக்கட்ட நடந்த சதியா?

நாளை வேறொருவரிடம் எங்களை தீர்த்துக்கட்டிய இடத்தையும் காட்டுவார்களா? எங்களோடு உடன்வந்தவர் உண்மையில் வீரப்பனின் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவரா? போன்ற கேள்விகள் சரமாரியாக மண்டையை குடைய ஆரம்பித்தது. ஆனால் எங்களை வழிநடத்திச் சென்ற அப்பகுதி நண்பரோ எதுவுமே தெரியாதவர்போல தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
குழப்பத்தின் உச்சியில் தொடர்ந்து நடந்தோம். உடன் வந்த நிருபரும், புகைப்படக்கலைஞரும்கூட அதை நிலையில் இருப்பதாக உணர்ந்தேன். சற்று தூரத்தில் சில குடிசைகள் தெரிந்தன. அருகே சென்றோம்.

சுமார் 10 அல்லது 15 குடிசைகள் இருக்கலாம். பெரும்பாலான குடிசைகளில் யாரும் இல்லை. இரண்டு மூன்று குடிசைகளில் சில பெண்கள் இருந்தனர். எங்களோடு வந்த அப்பகுதி நண்பர் அவர்களோடு எங்களுக்கு புரியாத மொழியில் ஏதோ பேசினார். அந்தப் பெண்களோ, நாங்கள் அவர்களுடை கண்களுக்கே புலப்படாததைப்போல எங்களை புறக்கணித்துவிட்டு தங்கள் வேலையை தொடர்ந்தனர். லிங்காயத்து எனப்படும் பிரிவைச் சேர்ந்த மலையின மக்கள் யாரோடும் பேச மாட்டார்கள் என்று கூறிய நண்பர், அப்பகுதியை சுதந்திரமாக சுற்றினார். அந்தக் குடிசைகளின் நடுவே சென்ற அவர் எங்களை அவசரமாக அழைத்தார்.

அந்தக் குடிசைகளின் நடுவே உள்ள குடிசையின் முன்னே கற்பூரமும், ஊதுவத்திகளும் எரிந்துகொண்டிருந்தன. உள்ளே ஏதோ பெண் கடவுளின் உருவம் பொறித்த திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது. வேறு யாரையும் காணோம். அந்தப்பெண்கள் கற்பூரம் ஏற்றியிருப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு வாய்ப்பில்லை! என்று அந்த நண்பர் சொன்னார். ஆனால் வேறு யார் அந்த கற்பூரத்தை எரித்து வழிபட்டிருக்கக்கூடும்? என்று அவர் சொல்லவில்லை. அதை கேட்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. உடன் வந்த நிருபரும், புகைப்படக்காரரும், காரோட்டியும் அந்த கோவிலில் ஒரு கும்பிடுபோட்டு விபூதி போன்று இருந்த மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டனர். ஒரு வேளை வீரப்பனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்!” என்று திரைச்சீலையில் இருந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் அதையும் செய்யவில்லை. வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. மீண்டும் மவுனமாக நடக்கத்தொடங்கினோம். ஆனால் வந்த வழியில் நடப்பதுபோல் தோன்றியது. வழிகாட்டி வந்த அப்பகுதி நண்பரிடம் கேட்டபோது, சகுனம் சரியில்லை என்று சொன்னதாக நினைவு. (இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது)
திரும்பி நடக்கும்போது, காரோட்டி என்னிடம் வந்து மலைப்பகுதிகளில் நடமாட்டம் அதிகரிப்பதாகவும், யாரோ கண்காணிப்பது போன்று தெரிவதாகவும் கூறி என் பயத்தை அதிகப்படுத்தினார். தேவையே இல்லாமல், காதலா-நட்பா என்று தெளிவில்லாமல் பழகிய பெண்களின் நினைவுகள் நிழலாடின.

அந்தச்சூழலில் நான் செய்யக்கூடிய செயல் ஒன்றுதான் இருந்தது. அப்பகுதி நண்பரை முன்னாள் நடக்கவிட்டு நாங்கள் பின்னால் நடப்பது! ஒருவேளை வீரப்பனோ, அவரது ஆட்களோ தொலைவிலிருந்து சுட்டால், அவரது ஆளை(??!!) சுடமாட்டார்கள் என்று நினைப்பு. அதையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. எனவே அந்த நண்பரின் நிழலாக அவரைத் தொடர்ந்தேன். வழக்கத்தைவிட மிகவும் மெதுவாக அந்த நண்பர் நடந்து கொண்டிருந்தார். சற்று வேகமாக நடக்கச் சொன்னேன். சகுனம் சரியில்லை என்று மீண்டும் சொன்னார். அப்போது நான், எனக்கு சகுனம், சாமி இவற்றில் நம்பிக்கை இல்லை என்று சொன்னேன். கோவிலில் சாமி கும்பிடாமல் இருந்ததை கவனித்ததாக சொன்ன அவர், இந்த குற்றத்திற்காகவும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறினார். நல்லவேளையாக இந்த உரையாடல் எங்கள் இருவருக்குள்ளேயே இருந்தது.
எனக்கு தண்ணீர் தாகமும், பசியும் எடுப்பதாக தோன்றியது. ஆனால் கையில் தண்ணீரோ, உணவோ எதுவுமே கிடையாது. என்ன முட்டாள்தனம். தொடர்ந்து நடந்த நண்பர் திடீரென பம்மி பதுங்கினார். ஒரு வேளை வீரப்பன்தானா? அவரை நாங்கள் பேட்டி எடுக்கப்போகிறோமா? அல்லது அவர் எங்கள் உயிரை எடுக்கப்போகிறாரா?

31 அக்டோபர், 2009

சந்தன வீரப்பனை பிடிப்பதற்காக உயிரை பணயம் வைத்த அதிகாரி!

[ இதற்கு முந்தைய பதிவு "சந்தன வீரப்பனை தேடிப்போன செய்தியாளனின் கதை..." படித்துவிட்டு இந்த பதிவை படித்தால் முழுமையாக புரியலாம். :) ]

வீரப்பனை தேடும் பணியில் செயல்பட்ட சிறப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய பலரும் இளைஞர்கள். திருமணம் ஆகாதவர்கள். கடும் பயிற்சி காரணமான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஆளானவர்கள். இவர்களுக்கு வீரப்பனை தேடும் அதிரடிப்படையில் பணி என்பது மண்ணில் தோன்றிய சொர்க்கமாக இருந்தது. கடும் பயிற்சிகளுக்கு பதிலாக ஓரளவு ஓய்வு கிடைத்தது. மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படிந்தே பழகியவர்களுக்கு மலைவாழ் பழங்குடி மக்களையும், மற்றவர்களையும் அதிகாரம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. அப்பகுதியில் இருந்த அனைத்தும் மனிதர்கள் உட்பட அதிரடிப்படையினருக்கு உரியதானது.

எந்த வீட்டிலும் நுழையலாம். எதையும் எடுக்கலாம். எப்படியும் பயன்படுத்தலாம். பிறகு அழிக்கலாம். சின்னாபின்னப்படுத்தலாம். யாரும் கேட்க மாட்டார்கள். யாருக்கும், எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. (மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் வழக்கறிஞர் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி என்ற நாவல் வடிவிலான வரலாற்றுப் பதிவினை தேடிப்படிக்கலாம்)

குடும்பத்தை பிரிந்து, கடும் உடற்பயிற்சிகளிலும், மேலதிகாரிகளின் ஈவு, இரக்கமற்ற நடைமுறைகளிலும் உடலும், மனமும் முரடாகிப்போன அதிரடிப்படை இளைஞர்களின் வக்கிர உணர்வுகளுக்கு தீனிபோடும் இடமாக அந்த வனப்பகுதி மாறிப்போனது.

(இவர்கள் செய்த வன்முறைகள் குறித்து புகார்கள் இருந்தாலும் சாட்சியங்கள் இல்லாததால் யாருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வீரப்பன் கொல்லப்பட்டபோது பதக்கங்களும் பரிசுகளும் கிடைத்தன. மனிதர்கள் உருவாக்கிய சட்டங்கள் இவர்களை தண்டிக்காவிட்டாலும், இயற்கை இவர்களில் சிலரை தண்டித்தது. எய்ட்ஸ் நோய் கடுமையாக நோக்கி உருக்குலைந்து, சீரழிந்து மறைந்து போனவர்களில் சிலர், இந்த அதிரடிப்படையில் பணியாற்றியவர்கள் என்று மருத்துவ நண்பர்கள் கூறியபோது அவர்களின் மறைவுக்கு நான் வருந்தவில்லை)

ஆனால், எங்களுடன் சுற்றிய க்யூ பிரிவு அதிகாரியோ முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். இனி அவரை மிஸ்டர் எக்ஸ் என்று அழைப்போம். எங்கள் செலவில் தேநீர் குடிக்கக்கூட தயங்கினார். மேலும் மதுப்பழக்கம் அறவே இல்லாதவராகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவராகவும் தோன்றினார். உரிய கண்காணிப்புகள் இருக்கும் நிலையிலேயே கடமை தவறும் அதிகாரிகளை பார்த்துப்பழகிய எங்களுக்கு, கண்காணிப்பே இல்லாத நிலையிலும் உயிருக்கும் துணிந்து கடமை செய்த அவர் ஒரு அதிசயப்பிறவியாக அவர் தோன்றினார். எனினும், செய்தியாளர்கள் காவல்துறையின் ஆட்காட்டியாக மாறக்கூடாது என்ற எனது நிலைப்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் அதை வெளிப்படையாக கூறிவிட்டு அவருடன் பழக ஆரம்பித்தேன்.

காவல்துறையினரின் மனிதத்தன்மையற்ற நடத்தைகளுக்கு காரணம் என்ன? என்று கேட்டபோது, கீழ்நிலைக் காவலர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்படுவதால் அவர்களுக்கு அடுத்தவர்களின் உரிமை குறித்த கவனமோ, கவலையோ இருப்பதில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். மேலும், மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிந்தே பழகிப்போன அவர்களுக்கு, அவர்களைவிட கீழான மக்களை பார்க்கும்போது, அதிகாரம் செய்துபார்க்க வேண்டும் என்ற ஆவல் அத்துமீறி ஏற்படுவதால் பல அத்துமீறல்கள் ஏற்படுகின்றன என்ற உளவியல் ரீதியான காரணத்தையும் கூறினார்.
வீரப்பனை தேடும் பணியில் அவருடைய வித்தியாசமான அனுபவங்களை கேட்டபோது பல அனுபவங்களை கூறினார். வீரப்பனின் கூட்டாளி சந்திர கவுடாவின் வீட்டருகே இருக்கும் கோவிலில் திருவிழா அந்தப் பகுதியில் மிகவும் முக்கியமானது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில் அந்தப் பகுதியே குலுங்கிப் போகும். அந்த விழா நாட்களில் வீரப்பன் அந்த கோவிலுக்கு வருவதாக இந்த மிஸ்டர் எக்ஸூக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

ஒற்றை ஆளாக அந்த திருவிழாவில் அன்னாசிப்பழ கடை வைத்திருக்கிறார் இவர். அந்த வேடத்திலேயே கோவிலுக்கு வந்து செல்லும் அனைவரையும் கண்காணிக்கவும் செய்திருக்கிறார். அவரிடம் இருந்த ஒரே ஆயுதம் கைத்துப்பாக்கி மட்டுமே. துணைக்கு யாரும் கிடையாது. சீருடை அணிந்த அதிரடிப் படையினருக்கும் இவர் யார்? என்பது தெரியாது.

திருவிழாவிற்கு வீரப்பன் வந்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் வீரப்பனின் நண்பர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர் வந்துள்ளனர். வீரப்பன் எப்படியும் வருவார் என்று சீருடை அணியாத ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அன்னாசிப்பழ வியாபாரி வேடத்தில் இருந்த மிஸ்டர் எக்ஸ்-ம் அமைதியாக உறுமீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கா காத்திருந்தார். இதற்கிடையில் சீருடை அணியாத ஆனால் காவல்துறை அடையாளத்தை மறைக்கமுடியாத காவலர்களால் வீரப்பன் எச்சரிக்கை அடைந்துவிட்டதாக கூறப்பட்டது. வீரப்பனின் ஆட்கள் என்று நம்பப்படும் சிலருக்கும், சீருடை அணியாத காவலர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு பக்கமும் இல்லாமல் தனியாக உளவு பார்த்த மிஸ்டர் எக்ஸ் மீது இரு தரப்புக்கும் சந்தேகம் ஏற்படவே உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தப்பியோடும் நிலையும் ஏற்பட்டது.
இந்த ஆபத்தில் தப்பிய மிஸ்டர் எக்ஸ்-க்கு மற்றொரு மிகப்பெரிய ஆபத்தும் ஏற்பட்டது.

வீரப்பன் இருந்த காட்டின் பல பகுதிகள் மிகவும் அடர்த்தியானது. சுமார் 10 அடிகளுக்கு அப்பால் யாரும் இருந்தால் அது நமக்கு தெரியாது. அந்த அளவுக்கு அடர்த்தியானது.

மூலிகை ஆய்வாளர், துறவி, அன்னாசிப்பழ வியாபாரி போன்று பல்வேறு அவதாரங்களில் தோன்றி அவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்து துப்பு துலக்கியுள்ளார். அப்போது, வீரப்பன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதாக மிஸ்டர் எக்ஸ்-க்கு தகவல் கிடைத்துள்ளது. வழக்கம்போல தன்னம்தனியாக இவர் கிளம்பிவிட்டார். அந்த தகவல் சரியோ, தவறோ இவரிடம் வீரப்பன் சிக்கவில்லை. ஆனால் இவர் வழி தவறிவிட்டார். பல மணி நேரம் நடந்த பிறகு, தாம் நடக்கும் பாதை சரிதானா? என்ற சந்தேகம் வந்து விட்டது. காட்டை விட்டு வெளியே வருவதாக நினைத்து, எதிர் திசையில் காட்டுக்குள் செல்கிறோமோ? என்ற ஐயம் வேறு. கையில் இருந்த உணவுப் பொருட்களான உலர் பழங்களும், குடிநீரும் வேறு தீர்ந்து விட்டது. உடலும், உள்ளமும் களைப்படைய தொடங்கியது. பசியும், தூக்கமும் கண்களை அடைக்கத் தொடங்கியிருக்கிறது.

வீட்டில் இருக்கும் மனைவியும், மக்களும் நினைவில் வரத்தொடங்க மிஸ்டர் எக்ஸ்க்கு, வாழ்வின் இறுதிக்காலத்தை எட்டிவிட்டோமோ? என்ற ஐயமும் எழ ஆரம்பித்திருக்கிறது. இவ்வாறான குழப்பநிலையில் மேலும் சில தினங்கள் கழிந்தன, உணவுக்கும்-குடிநீருக்கும் வழியின்றியே! மரண தேவன் அருகில் வருவதாக உணர்ந்த மிஸ்டர் எக்ஸ், உடல் சக்தியை சேமிப்பதற்காக தூரமாக நடப்பதை கைவிட்டிருக்கிறார்.

அப்போது அப்பகுதியில் மனித அரவம் கேட்கவே காதைத் தீட்டியிருக்கிறார். பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு நபர் அந்த பக்கமாக வருவது தெரியவே, சக்தியை குவித்து அவரை அழைத்திருக்கிறார்.
அந்த பழங்குடியின நபரும் இவர் அருகே வந்து விசாரிக்க, தன்னை மூலிகை ஆராய்ச்சியாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வழி தவறி வந்துவிட்டதாக கூறுகிறார். மேலும் தன்னிடம் இருந்த உணவும், நீரும் தீர்ந்துவிட்டதாகவும், தன்னை காட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்கிறார். அதற்கு, காட்டை விட்டு வெளியேற மேலும் சில நாட்கள் நடக்க வேண்டும் என பதில் வருகிறது. இதனால் மனம் உடைந்த மிஸ்டர் எக்ஸ், தனது உடல்நிலை அதைத்தாங்குமா? எனத் தெரியவில்லை என்றும், ஒரு வேளை தாம் இறந்துவிட்டால், உடலில் கயிறை கட்டி இழுத்தாவது சென்று அருகிலுள்ள காவல் நிலையம் எதிரே போட்டுவிடுமாறும் கேட்டுக் கொள்கிறார்.

அந்த பழங்குடி இன நபரோ, நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறி, மிஸ்டர் எக்ஸ்-ஐ அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு சற்றுநேரம் சுற்றித்திரிந்து சில தாவர இலைகளோடு வருகிறார். கூடவே சிறிது தண்ணீரும். தாவர இலைகளை அங்கிருந்த பாறைகளில் வைத்து அரைக்கிறார். அது ஒரு லேகியம் போல திரள்கிறது. அதை உருண்டையாக உருட்டி மிஸ்டர் எக்ஸ்-இடம் கொடுத்து உண்ணச் சொல்கிறார். மிஸ்டர் எக்ஸ்-க்கோ, வீரப்பனே எதிரே வந்து நச்சுத் தாவரங்களை உருட்டித் தருவதாக தோன்றுகிறது. எனவே அதை உட்கொள்ள தயங்குகிறார். இந்த தயக்கத்தை புரிந்து கொண்ட பழங்குடி நபர் அந்த உருண்டயை பாதியாக பிரித்து தனது வாயில் போட்டுக்கொண்டு சிரிக்கிறார். அந்த சூழ்நிலையில் வேறு வழியின்றி மீதி உருண்டையை வாயில் போட்டு தண்ணீரை அருந்துகிறார், மிஸ்டர் எக்ஸ். சில நிமிடங்களில் அவர் உடலில் சக்தி ஏற்படுகிறது. நடக்கத் தொடங்குகின்றனர். மேலும் சில நாட்கள் நடந்த பின்னர் காட்டைவிட்டு வெளியேறுகின்றனர். அதுவரை மிஸ்டர் எக்ஸ்-க்கு தண்ணீர் தாகமோ, பசியோ, தூக்கமோ வரவில்லை. உடலின் சக்தி சற்றும் குறையவும் இல்லை. அந்த பழங்குடி நபர் கொடுத்த மூலிகையே அனைத்தையும் சமாளிக்கிறது.

காட்டை விட்டு வெளியே வந்த மிஸ்டர் எக்ஸ், பழங்குடி நபரிடம் விடை பெறுகிறார். அப்போது பழங்குடி நபர், விடை கொடுப்பதோடு குளிக்கும் வரை தூக்கமோ, பசியோ வராது. எனவே பசியாறவும், தூங்கவும் வாய்ப்பிருக்கும்போது மட்டும் குளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். தமது அறைக்கு வந்த மிஸ்டர் எக்ஸ் குளித்த பின் உணவை உட்கொண்டு, தூங்கி எழவே அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

அப்போதுதான் பழங்குடி இன மக்கள், காடுகளைப் பற்றியும், காட்டுத் தாவரங்களை பற்றியும் எவ்வளவு அறிவை பெற்றுள்ளனர் என்பதை குறித்து மிஸ்டர் எக்ஸ் சிந்திக்கிறார். சாதாரணமாக சுற்றித்திரியும் பழங்குடி மக்களுக்கே இந்த அறிவு இருந்தால், உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக வனத்தில் மறைந்திருக்கும் வீரப்பனுக்கு காடுகளைப்பற்றி எவ்வளவு அறிவு இருக்கும்? என்ற ஐயமும் அவருக்கு ஏற்படுகிறது. தனக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்றைக்கொடுத்து, எதிரிகளை பார்க்காமலே மரண பயத்தை அனுபவிக்கவைத்த வீரப்பனுக்கு நன்றி சொல்லிவிட்டு தமது பணிகளை தொடர்ந்தார், மிஸ்டர் எக்ஸ்.
----
மது நேர்மையான வாழ்க்கையையும், சந்தித்த இக்கட்டான சூழ்நிலைகளையும் விவரித்த மிஸ்டர் எக்ஸ், எங்களிடமிருந்து பிரிந்து வேறு திசையில் செல்வதாகக் கூறினார்.

முதல்முறையாக அவரிடம் சிரித்து பேசி வழியனுப்பி வைத்தேன். என்னுடன் இருந்த நிருபருக்கோ க்யூ பிரிவு போலிஸ் அதிகாரியை பிரிவதில் பெரும் வருத்தம்.

அவரை பிரிந்த பின்னும் நாங்கள் வனப்பகுதிகளில் சுற்றுவதை நிறுத்தவில்லை. வீரப்பன் வழக்கமாக சாமி கும்பிடும் கோவிலை காட்டுவதாக எங்கள் சோர்ஸ் ஒருவர் கூறியதை அடுத்து நாங்கள் மேற்கொண்ட பயணம் எங்கள் குழுவினருக்கும் மரண பயம் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்தியது.