13 மே, 2014

பல்லுயிரிய பாதுகாப்பும், இந்தியாவின் பயன்படாத சட்ட நடைமுறைகளும்..!

“உணவை ஆயுதமாக பயன்படுத்த முடியுமெனில் அதை மகிழ்ச்சியுடன் செய்வோம்!”
      –ஏர்ல் பட்ஸ், 
அமெரிக்காவின் முன்னாள் வேளாண்துறை அமைச்சர்

இந்தியாவின் பிரதான உணவுப் பொருளான நெல்லில் தற்போது எத்தனை வகைகள் இருக்கின்றன தெரியுமா? என்று ஒரு தற்கால விவசாயியிடமோ, நெல் மண்டிக்காரரிடமோ விசாரித்தால் அதிகபட்சமாக சுமார் 100 நெல்வகைகளை பட்டியலிடக்கூடும்.

ஆனால் இந்தியாவில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் நெல் வகைகள் இருந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. விளையும் பகுதியின் மண்வளம், தட்பவெப்ப நிலை உள்ளிட்ட காரணிகளுக்கேற்ப இயற்கையில் உருவான இத்தனை நெல்வகைகளையும் நமது முன்னோர்கள் அடையாளம் கண்டு பட்டியலிட்டு, பாதுகாத்து, பயன்படுத்தி வந்துள்ளனர். இவை அனைத்தும் எங்கே சென்றன?

அரிசி உணவுக்கு தொடர்பே இல்லாத அமெரிக்க பெருமுதலாளிகள் இணைந்து 1960ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் ஆரம்பித்த பன்னாட்டு நெல் ஆராய்ச்சி மையத்தின் சதித்திட்டம் காரணமாகவே நமது பாரம்பரிய நெல் ரகங்கள் திட்டமிட்டு திருடப்பட்டு, அழிக்கப்பட்டு உயர் விளைச்சல் ரகங்கள் என்ற பெயரில் தரமில்லாத நெற்பயிர்கள் இங்கே இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இதில் வேளாண் நிபுணர் என்று போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் முக்கிய பங்காற்றியதாகவும் கோவாவைச் சேர்ந்த பிரபல சூழலியல் ஆர்வலர் கிளாட் ஆல்வாரிஸ் “A Great Gene Robbery” என்ற கட்டுரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

+++

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பால்லியா மாவட்டத்தில் பல்லாண்டுகாலமாக பயிரிடப்பட்டு வரும் பார்லி (வால் கோதுமை) பயிருக்கு ஜப்பானில் உள்ள சப்போரா என்ற மதுபான ஆலை பேடன்ட் உரிமை பெற்றுள்ளது.

               


பார்லி என்ற சிறுதானியம் வட இந்தியாவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருளாகும். புரதச்சத்தும், மேலும் பல சத்துகளும் மிகுந்த பார்லி தமிழ்நாட்டிலும்கூட பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக பால்லியா மாவட்டத்தில் பயிர் செய்யப்படும் பார்லி பல சிறப்புத்தன்மைகளை கொண்டதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த பார்லியில் லிபோசைனேஸ்-1 என்ற என்ஸைம் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த பார்லியில் தயாரிக்கப்படும் பீர் எனப்படும் மதுபானம் நீண்ட நாட்களுக்கு புதுப்பொலிவோடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் தேசிய பல்கலைக்கழகமான ஓகயாமா பல்கலைக்கழகத்தின் விதை வங்கியில் இந்த பார்லி விதைகளை கண்ட சப்போரா நிறுவனம் இதற்கு பேடன்ட் உரிமை பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த சப்போரா மதுபான நிறுவனம், பன்னாட்டு விதை நிறுவனமான கார்கில் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.

சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உத்தரபிரதேசம், பால்லியா மாவட்டத்தில் பயிரிடப்பட்டுவந்த பார்லி பயிருக்கு, ஜப்பான் நாட்டின் சப்போரா நிறுவனம்  பேடன்ட் உரிமை பெற்றதில் பால்லியா மாவட்ட விவசாயிகளுக்கு எந்த நற்பயனும் ஏற்படவில்லை. அதற்கு பதிலாக இனி இப்பகுதி விவசாயிகள் அந்த பார்லி பயிரை பயிரிடுவதற்கு சப்போரா நிறுவனத்திற்கு ராயல்டி செலுத்தும் நிலை ஏற்படலாம்.

இது ஒரு சிறிய உதாரணம்தான்! இதைப்போல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறப்பியல்பு வாய்ந்த பல்வேறு பல்லுயிர் இயற்கை வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் “அறிவுசார் சொத்து” உரிமையாகின்றன.


1994ம் ஆண்டில் வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைக்கான பன்னாட்டு ஒப்பந்தம் [Agreement on Trade Related Aspects of Intellectual Property Rights (TRIPS)] கையெழுத்தானதை தொடர்ந்து உலக வர்த்தகத்தின் போக்கே திசை மாறியது. இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் எவ்விதமான விவாதமும் நடத்தப்படாமலே, யாருக்கும் எந்த விளக்கமும் அளிக்கப்படாமலே இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது..! (இந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் நாம் அனைவரும் கடமை உணர்வுடன் வரிசையில் நின்று வாக்களித்து நம் விரலை கறைப்படுத்திக் கொண்டுள்ளோம்)

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டக்கோட்பாடுகளுக்கு எதிரான பல அம்சங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை தேவையான அளவில் எத்தரப்பிலும் விவாதங்கள் நடைபெறவில்லை என்பதே உண்மை.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த பல மனித உரிமைக்கூறுகளை இந்த ஒப்பந்தம் கேள்விக்குறியாக்குகிறது. கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தனியார்மயமாக்கி அதற்கான விலை கொடுப்பவர்களுக்கு மட்டுமே அவை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குகிறது. ஆனால் இது குறித்த எந்த விமரிசனங்களும் நடத்தாமல் ஆண்டுதோறும் ஏப்ரல் 26ம் தேதியன்று அறிவுசார் சொத்துரிமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த அறிவுசார் சொத்துரிமை என்ற கருத்தாக்கம் வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளை தலைகீழாக புரட்டிப்போடுகிறது என்றே சொல்லலாம்.

அறிவுசார் சொத்துரிமையின் ஒரு மிகமுக்கியமான பிரிவு பேடன்ட் என்று அழைக்கப்படும் புத்தாக்க உரிமையாகும். புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தும் ஒருவருக்கு அதற்கான அங்கீகாரத்தையும், பொருளியல் ரீதியான பலனையும் கொடுப்பதன் மூலம் மென்மேலும் கண்டுபிடிப்புகள் நிகழும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த பேடன்ட் உரிமை உருவாக்கப்பட்டது.

இயற்கையில் உருவாகாத, புழக்கத்தில் இல்லாத ஒரு புதிய பொருளை அதற்கான பயன்பாட்டுடன் கண்டுபிடிக்கும் ஒருவருக்கு இந்த பேடன்ட் உரிமை வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது. இதன் அடிப்படையில் இயற்கையில் உருவாகும் தாவர வகைகளுக்கோ, விலங்குகளுக்கோ, அவற்றின் உறுப்புகளுக்கோ பேடன்ட் உரிமை வழங்கக்கூடாது என்ற தடை விதிக்கப்பட்டது.

எனினும் பெரும் வர்த்தகக்கழகங்களின் நிர்பந்தகளால் இந்த தடையில் ஆங்காங்கே ஓட்டைகள் உருவாக்கப்பட்டன. இதன்படி தாவர, விலங்குகளின் அணு(Cell)க்களில் மனிதத்தலையீடு மூலம் மாற்றம் இருந்தால் அந்த குறிப்பிட்ட அணுக்களுக்கு பேடன்ட் உரிமை வழங்கலாம் என்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து தாவர, விலங்குகளின் மரபணுக்களில் மனிதத் தலையீடு மூலமாக மாற்றம் செய்யும் மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு பேடன்ட் வழங்கும் முறை அமலுக்கு வந்தது. இதை ஆயுதமாக பயன்படுத்தும் மான் சான்டோ உள்ளிட்ட பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உலகில் உள்ள அனைத்து தாவரங்களையும், விலங்குகளையும் தம் அறிவுசார் சொத்துரிமை என்று பதிவு செய்வதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.  இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள பாரம்பரிய தாவர வகைகளை ஏதோ ஒரு விதத்தில் தமது அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்து, அவற்றின் உண்மையான உரிமையாளர்களான விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்பாட்டிலும் அந்த நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

பேடன்ட் என்ற பெயரில் பெரும் வர்த்தக்கழகங்கள் உலகில் உள்ள அனைத்து தாவர, விலங்குகளையும் தமதாக்கிக் கொள்ளும் சதித்திட்டத்தை உணர்ந்த பல தரப்பினரும்
மேற்கொண்ட போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பது என்ற பெயரில் சில சட்டங்களை உலக வர்த்தகக் கழகம் அறிமுகம் செய்தது.

இத்தகைய ஒரு சட்டம் இந்தியாவில் அமல் செய்யப்படும் விதத்தைப் பார்ப்போம்.

கடந்த 2002ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டம், பல்லுயிரியச் சட்டம், 2002 (The Biological Diversity Act, 2002) ஆகும். இந்தியாவின் வளங்களில் ஒன்றான பல்வகைப்பட்ட தாவர, விலங்கு உயிரினங்களையும் இவற்றை போற்றி பாதுகாத்து வரும் பாரம்பரிய அனுபவம் மற்றும் நவீன அறிவியல் அறிவு ஆகியவற்றை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக இந்த சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களோ, வேறு அமைப்புகளோ வணிக ரீதியில் பயன்படுத்தும்போது பன்னெடுங்காலமாக இவற்றை போற்றி பாதுகாத்த மக்களுக்கு உரிய பொருளாதார பலனை அளிப்பதற்கு (Benefit sharing) வழிகாணும் நோக்கமும் இந்த சட்டத்தின் முக்கிய அம்சம் என்று இச்சட்ட முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் தேசிய பல்லுயிரிய ஆணையம் அமைத்தல், மாநில பல்லுயிரிய ஆணையங்களை அமைத்தல் இவற்றின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் பல்லுயிரிய மேலாண்மைக் குழுக்களை (Bio-Diversity Management Committee) அமைத்தல், இக்குழுக்களின் மூலம் மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register) உருவாக்கி பராமரித்தல் உள்ளிட்டவற்றை நடைமுறைக்கு கொண்டுவருவதே பல்லுயிரியச் சட்டம், 2002-இன் நோக்கமாகும்.

இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய தாவரங்களையோ, விலங்குகளையோ பன்னாட்டு வணிக நிறுவனங்கள் எந்த வகையிலும் களவாடி பேடன்ட் உரிமை பெறுவதை தடுப்பதே இந்த சட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தேசிய பல்லுயிரிய நிறுவனம் சென்னையில்தான் இயங்குகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மாநில பல்லுயிரிய ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடுகள்தான் பெருமளவில் கேள்விக்குரியதாக உள்ளது.

பல்லுயிரிய பாதுகாப்புக்கான அடிப்படை அலகு உள்ளாட்சி அமைப்புகளில் இயங்கும் பல்லுயிரிய பாதுகாப்பு குழுவாகும். பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் உரிய கட்டாய இட ஒதுக்கீட்டை அளிக்கும் இந்த குழுவின் முக்கியமான பணி, மக்களுடைய பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register) உருவாக்கி பராமரித்தல் ஆகும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்களோ, அவற்றின் பிரதிநிதிகளோ இந்தியாவின் பாரம்பரிய செல்வங்களான தாவர வகையையோ, விலங்கு வகையையோ எவ்விதத்தில் பதிவு செய்தாலும் அதைக் கண்டறிந்து தடுக்க முடியும்.

இந்தியாவின் பாரம்பரிய உரிமையான தாவரங்களையோ, விலங்குகளையோ வணிக நோக்கில் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் அதனால் ஏற்படும் லாபத்தில் அந்த அரிய வகை உயிரினத்தை பாதுகாத்து வைத்திருக்கும் சமூக மக்களுக்கும் உரிய பங்கை பெறுவதற்காகவே (Benefit sharing) இத்தகைய மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register) பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த பல்லுயிரிய பாதுகாப்புக் குழு கேரளா போன்ற சில மாநிலங்களில் மிகச்சிறப்பாகவும், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் மிகவும் கவலைக்குரிய விதத்திலும் செயலாற்றி வருகின்றன.

பல்லுயிரிய பாதுகாப்பு குறித்த விவகாரங்களில் தமிழ்நாட்டின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பல்லுயிரிய பாதுகாப்பில் மிகச்சிறப்பான கவனம் செலுத்தி வருகின்றன.

உள்ளாட்சி அமைப்புகள் ரீதியாக செயல்படவேண்டிய பல்லுயிரிய பாதுகாப்புக்குழுக்கள் மத்திய பிரதேசத்தில் மிக அதிக எண்ணிக்கையாக 23,743ம், கர்நாடகத்தில் 4,493ம், கேரளாவில் 1043ம் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டிலோ வெறும் 13 பல்லுயிரிய பாதுகாப்புக்குழுக்களே இருப்பதாக தேசிய பல்லுயிரிய ஆணைய இணையம் தெரிவிக்கிறது.

இந்த பல்லுயிரிய பாதுகாப்புக்குழு சார்பில் உருவாக்கப்பட்ட மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register)-இன் எண்ணிக்கையை பார்ப்போம். மத்திய பிரதேசத்தில் 741, கேரளாவில் 670, கர்நாடகத்தில் 267 மக்கள் பல்லுயிரிய பதிவேடுகள் உருவாக்கப்பட்டு அம்மாநிலங்களின் பாரம்பரிய பல்லுயிரிய செல்வங்கள் பதிவு செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு மக்கள் பல்லுயிரிய பதிவேடுகூட (People’s Bio-Diversity Register) உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை.

பல்லுயிரிய பாதுகாப்புக்குழு இயங்கும் இடங்களில்கூட அதற்கான அதிகாரங்களோ, நிதி ஆதாரங்களோ வழங்கப்படாமல் தடுக்கும் பணியே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் பல்லுயிரிய பதிவேடு (People’s Bio-Diversity Register)-இன் சட்ட அதிகாரம் வரையறுக்கப்படாமல் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இதுவரை உள்ளது.

இந்தக்குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி நாடு முழுவதும் உள்ள சுமார் 300 சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட மனு ஒன்று கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ. ராசா அவர்களிடம் நேரில் அளிக்கப்பட்டது. சுமார் 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த மனு இதுவரை யார் கண்ணிலும் படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மற்றும் மக்களின் இத்தகைய பொறுப்பற்ற போக்கின் காரணமாகவே, இந்த கட்டுரையில் நாம் ஏற்கனவே பார்த்ததுபோல உத்தரபிரதேச பார்லி பயிருக்கு, ஜப்பான் நாட்டு மதுபான நிறுவனம் பேடன்ட் உரிமை பதிவு செய்கிறது. நம் நாட்டு வேம்புக்கும், பாசுமதி அரிசிக்கும் இன்னும் பல இயற்கை வளங்களுக்கும் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் உலகின் பல நாடுகளிலும், இந்தியாவிலும்கூட பேடன்ட் உரிமைக்கான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்காகவே மரபணு மாற்றுத் தொழில் நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பல்வேறு முறைகேடுகளோடு அறிமுகம் செய்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட இயற்கை செல்வங்களைக் கொண்ட நாடுகளின் பாரம்பரிய செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களின் உரிமையாக்கும் பேடன்ட் உரிமை பதிவு செய்யும் முறைகள் அனைத்து நாடுகளிலும் மிகவும் செம்மையாக செயல்பட்டு வருகிறது. இது குறித்த எந்த அடிப்படை புரிதலும் இன்றி தேசிய பல்லுயிரிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் கண்ணையன் அவரது அலுவலக ரீதியான கடமையையும் பொறுப்புகளையும் மறந்துவிட்டு, “மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை வேளாண்துறையில் பயன்படுத்துவதன் மூலமே உணவு உற்பத்தியை பெருக்கி, ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க முடியும்” என்பது போன்ற தவறான தகவல்களை பதிவு செய்வது மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்தியாவின் இயற்கை பல்லுயிரிய வளங்களை பாதுகாப்பதற்காக கடந்த 2002ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சட்டம், சுமார் 12 ஆண்டுகள் நிறைவடையும் நிலையிலும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதை அரசு அமைப்புகளின் தோல்வியாகக்கூட கருதலாம்.

இயற்கையின் கருணையாலும், மக்களின் கூட்டு உழைப்பாலும் உருவான இயற்கைச் செல்வங்களை பன்னாட்டு நிறுவனங்களின் கயமைத்தனத்திலிருந்து பாதுகாக்கும் சட்ட நடைமுறைகள் அனைத்தும் திட்டமிட்டு பாழடிக்கப்படுகின்றன.

இந்தியாவின் இறையாண்மையை பலியாக கேட்கும் இந்த சதித்திட்டங்கள் குறித்து அரசியல் கட்சியினருக்கோ, அதிகார வர்க்கத்தினருக்கோ, வணிக ஊடகங்களுக்கோ, நீதித்துறைக்கோ, மக்கள் அமைப்புகளுக்கோ எவ்விதமான அக்கறையுமில்லை.

என்ன செய்யப் போகிறோம்?
-சுந்தரராஜன்
(E-Mail: gmail@LawyerSundar.com)

14 பிப்ரவரி, 2014

நம்மாழ்வார் என்ற சட்ட ஆய்வாளர்...!

நம்மாழ்வாரை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற உலகமயமாக்கல் கொள்கையும், அதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்படும் விளைவுகளும்!” என்ற கருத்தரங்கில் முதன்முறையாக சந்தித்தேன். அப்போது நான் திருச்சியில் ஒரு தினசரி பத்திரிகையில் செய்தியாளனாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். சவுத் ஏஷியன் புக்ஸ், பூவுலகின் நண்பர்கள் போன்ற பதிப்பகங்கள் அப்போது வெளியிட்டிருந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூலம் உலகமயமாக்கல் பொருளாதார கொள்கைகளால் ஏற்படவிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஓரளவு அறிந்திருந்தேன். அந்த நிலையில் நம்மாழ்வார் அவர்கள், உலகமயமாக்கல் கொள்கையால் இந்திய வேளாண்துறைக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுவந்த மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் கூறிய கருத்துகளால் க(ல)வரப்பட்ட நான், நம்மாழ்வாரின் அன்றைய பேச்சை செய்தியாக்கினேன்.


பின்னர் சென்னைக்கு தொலைகாட்சிப் பணிக்கு வந்தபின் நம்மாழ்வாருக்கும் எனக்கும் தொடர்பில்லாமல் போனது. செய்தியாளர் பணியைவிட்டு வெளியேறி முழுநேர வழக்குரைஞராக வாழ்க்கை நடத்துவது என்ற முடிவை எடுத்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து “மனித உரிமை – சுற்றுச்சூழல் நீதிக்கான வழக்கறிஞர் மையம்” என்ற பெயரில் இயங்க முயற்சித்தோம். இதற்கிடையில் சட்டமேற்படிப்புக்கான ஆய்வில் பெர்ஸி ஷ்மெய்சர் (Percy Schmeiser) என்ற கனடா நாட்டு விவசாயி அறிமுகமானார்.

கடந்த 1998ம் ஆண்டு மான்சான்டோ என்ற பன்னாட்டு விதை நிறுவனம் பெர்ஸி ஷ்மெய்சருக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தது.  அந்த நிறுவனம் பேடன்ட் உரிமை பெற்றிருந்த மரபணு மூலக்கூறுகள் கொண்ட தானியத்தை பெர்ஸி ஷ்மெய்சர், உரிய ராயல்டியை வழங்காமல் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளதாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. 

தாம் அவ்வாறு விரும்பி செய்யவில்லை என்றும், அருகாமையில் அந்த நிறுவனத்தின் விதைகளை சாகுபடி செய்திருந்த நிலத்திலிருந்து அந்த மரபணு மூலக்கூறுகள் தம் நிலத்தில் காற்று மூலமோ, பூச்சிகள் மூலமோ பரவி தமது வயலில் ஊடுருவி இருக்கலாம் என்று பெர்ஸி ஷ்மெய்சர் விளக்கம் கூறினார். மேலும் தம் நிலத்தில் அத்துமீறி ஊடுருவிய மான் சான்டோ நிறுவனமே குற்றவாளி எனக் குற்றம் சாட்டிய அவர், தமது நிலத்தை பாழ்படுத்திய மான் சான்டோ நிறுவனம்தான் தமக்கு இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வழக்காடினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் மான் சான்டோ நிறுவனம் பேடன்ட் உரிமை பெற்றிருந்த மரபணு மூலக்கூறுகளை உரிய ராயல்டி செலுத்தாமல் பதுக்கி வைத்திருந்தது, அறிவுச் சொத்துரிமை சட்டப்படி குற்றம் என்று கூறிய கனடா நீதிமன்றம், விவசாயி பெர்ஸி ஷ்மெய்சர், மான் சான்டோ நிறுவனத்திற்கு பலகோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து பெர்ஸி ஷ்மெய்சர் மேல்முறையீடு மூலம் மான்சான்டோ நிறுவனத்திற்கு எதிராக தனது சட்டப் போராட்டத்தை தொடங்கினார். அதே நேரத்தில் மான் சான்டோ நிறுவனமும் பல நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தது.

மான் சான்டோ, பாயர், டு பான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் இந்த அசுரத் தாக்குதல் இந்திய விவசாயிகளின் மீதும் விரைவில் நடக்கலாம் என்ற நிலையில், இது குறித்த விவாத நிகழ்வு ஒன்றை நடத்த திட்டமிட்டோம்.

"மரபணுமாற்றப்பட்ட விதைகள் உழவர்களின் வளர்ச்சிக்கா? அல்லதுபன்னாட்டு வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கா?" என்ற தலைப்பில் நடந்த விவாத நிகழ்வு 17-01-2007 அன்று நடந்தது. லயோலா கல்லூரி பேராசிரியர் முனைவர் வின்சென்ட் நெறியாள்கையில் நடந்த அந்த நிகழ்வில் விவசாயிகள் சார்பில் நம்மாழ்வார், நல்லாக் கவுண்டர், அரச்சலூர் செல்வம், மருத்துவர் சிவராமன் ஆகியோரும், எதிரணியில் வேளாண் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்ற பெருமக்களும் கலந்து கொண்டு விவாதித்தனர்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய நம்மாழ்வார் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு அவலங்கள் குறித்து உரையாற்றினார். அதோடு விவசாயிகளின்  அவல நிலைக்கு காரணமான பன்னாட்டு விதை நிறுவனங்கள், அவற்றின் உள்நாட்டு பங்காளிகள், இவற்றை நெறிப்படுத்த வேண்டிய அரசு அமைப்புகள் ஆகியவை இந்தியாவின் எந்தெந்த சட்டங்களை மீறுகின்றன அவ்வாறு சட்டங்களை மீறும் நிறுவனங்கள் – அமைப்புகள் மீது எந்தெந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுக்கலாம் என்று தேர்ந்த ஒரு சட்ட மேதையாக பட்டியலிட்டார்.

குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுப்பு 21 வழங்கும் வாழ்வாதார உரிமைகளை இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் முழுமையாக பாதிப்பதை சுட்டிக்காட்டினார். மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 14 உறுதி செய்யும் சமத்துவ உரிமை முழுவதுமாக பறிபோவதையும் அவர் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 4-இல் உள்ள அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் முற்றிலுமாக புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு எதிராக நடக்கும் ஆட்சிக்கு எதிராக பொறுப்புள்ள குடிமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று நம்மாழ்வார் வலியுறுத்தினார். அவ்வாறு அரசுக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி-4அ- இல் கூறப்பட்டுள்ள குடிமக்களுக்கான அடிப்படை கடமைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதையும் நம்மாழ்வார் சுட்டிக்காட்டினார்.

மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் அறிமுகம்  செய்வதன் மூலம் நம் நாட்டின் நிலம், நீர், காற்று உள்ளிட்ட சூழல் முழுவதும் மாசுபடுவதை நம்மாழ்வார் விரித்துரைத்தார். இதற்கு காரணமான பன்னாட்டு நிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறிய நம்மாழ்வார், பொதுச்சுகாதாரத்தை பாழ்படுத்தும் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க முடியும் என்று குறிப்பிட்டார். இத்துடன் நில்லாமல் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து இந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் இழப்பீடு பெறவேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

மேலும், விதைச் சட்டம் (The Seeds Act,1966), புத்தாக்க உரிமைச் சட்டம்(The Patent Act, 1970), தாவர வகைகள் – விவசாயிகள் உரிமை பாதுகாப்பு சட்டம் (The Protection of Plant Varieties and Farmers Rights Act, 2001), உயிரினவகை வேறுபாட்டுச்சட்டம் (The Biological Diversity Act, 2002), நிலவியல் குறியீடுகளுக்கான சட்டம் (The Geographical Indications of Goods (Registration and Protection) Act, 2001) என்று பல்வேறு பெயர்களில் சட்டங்கள் உருவானாலும் அவை அனைத்தும் விவசாயிகளின் பாரம்பரிய அறிவுச் சொத்துரிமையை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் உரிமையாகவே உள்ளது என்பதையும் அம்பலப்படுத்தினார்.

அந்த விவாத அரங்கில் பார்வையாளராக இருந்த பல வழக்கறிஞர்களுக்கும் நம்மாழ்வாரின் உரை பல புதிய சாளரங்களை திறந்து விடுவதாக இருந்தது.

இதைத் தொடர்ந்து எனக்கும் நம்மாழ்வாருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக வேளாண்மையில் மரபணுமாற்றுத் தொழில்நுட்பத்தை புகுத்துவதற்கு முன்னோடியாக கத்தரிக்காயில் மரபணுமாற்றுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்தபோது அதற்கு எதிரான நடவடிக்கைகள் சூடுபிடித்தன. இந்த முயற்சிகளில் நானும் வாய்ப்பிருந்த போதெல்லாம் பங்கேற்றேன். இந்த காலகட்டத்தில் நம்மாழ்வாருக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறைந்து நட்பு மலர்ந்தது.

மரபணுத் தொழில்நுட்பத்தை பின் தொடர்ந்து வரும் அறிவுச் சொத்துரிமை தொடர்பாக விதைச் சட்டத்தில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. பேடன்ட் என்று கூறப்படும் புத்தாக்க உரிமைச் சட்டத்தின் கீழ் உயிருள்ளவற்றையும் பதிவு செய்யும் வகையில் சர்வதேச அளவில் சட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இது இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்நிலையில் பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழகம், ஹைதராபாத் நல்சார் சட்டப்பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற இடங்களில் நடந்த சட்டம் சார்ந்த கருத்தரங்குகளில் நம்மாழ்வாரோடு பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த கருத்தரங்குகளில் நிபுணர்களும், ஆய்வாளர்களும் அளிக்கும் கருத்துரைகள் அத்துறை சார்ந்த அறிவை எனக்கு அளித்தன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த கருத்தரங்க நாட்களின் ஓய்வு நேரங்களில் நம்மாழ்வாரோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர் கூறிய பல கருத்துகளே என்னை மாற்றி அமைத்தன. வேளாண் துறையில் பட்டம் பெற்ற நம்மாழ்வார் வேளாண் துறை தொடர்பான சட்டங்களில் நான் இதுவரை பார்த்த எவரை விடவும் அதிகமான அறிவும், அதனை திறனாயும் ஆற்றலும் பெற்றிருந்தார்.

நடைமுறையில் இருந்த குற்றவியல், உரிமையியல் சட்டங்கள் மட்டும் அல்லாது தொழில்நுட்பம் சார்ந்து புதிதாக வந்து கொண்டிருந்த அறிவுச்சொத்துரிமை சட்டங்கள் குறித்த அறிவும், அந்த சட்டங்களை விமரிசனப் பார்வையில் திறனாய்வு செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. இது குறித்து அவரிடமே நான் ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பினேன். விவசாயிகள் சட்ட அறிவைப் பெறவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றுகூறிய நம்மாழ்வார், என்னைப் போன்ற வழக்கறிஞர்கள் செய்ய வேண்டிய தலையாய கடமை தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு தேவையான சட்டப் பாதுகாப்பையும், சட்ட அறிவையும் வழங்குவதே என்பதையும் எடுத்துரைத்தார்.

நம்மாழ்வார் உரையாடல் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரோடு உரையாடிய தருணங்கள் என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள். விமர்சனம் செய்வதற்கும், விமர்சனத்தை ஏற்பதற்கும் அவர் தயங்கியதில்லை. ஆனால் அவர் உரையாடும் விதமோ யாருக்கும் எவ்விதக் குறையும் ஏற்படாத சூழலை ஏற்படுத்தும். என்னிடம் அவர் உரையாடும்போது அவரது சந்தேகங்களை ஒரு குழந்தையை போன்ற ஆர்வத்துடன் கேட்பார். 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கடற்கரைப் பகுதிகளை சூறையாடிய தினத்தில் அன்றைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சர்ச்சைக்குரிய சட்டதிருத்தம் ஒன்றில் கையொப்பம் இட்டார். அதுவரை ஒரு பொருள் செய்யப்படும் முறைக்கு மட்டுமே புத்தாக்க உரிமை வழங்கப்பட்டு வந்தது. சுனாமி வந்த தினத்தன்று அப்துல் கலாம் கையொப்பம் இட்ட அந்த சட்ட திருத்தத்தின் மூலம்  ஒரு பொருளுக்கே புத்தாக்க உரிமை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இது மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நம்மாழ்வார் மிக விரிவாக கேட்டறிந்தார்.

நம்மாழ்வாரிடம் நாம் கேள்வி எழுப்பும்போது,  தோளின் மேல் கைபோட்டு உரையாடும் ஒரு தோழனைப் போல் பதில் சொல்வார். அவரது குரலில் அதிகாரத்தின் தொனியோ, உபதேசத்தின் தொனியோ இருந்து நான் பார்த்ததில்லை. ஏமாற்றமோ, அவநம்பிக்கையோ அவரது குரலில் இருந்ததாகவும் எனக்கு நினைவில்லை. உழவர்கள் தற்கொலை போன்ற துயரமான அம்சங்களைப் பேசும்போது மட்டும் அரிதாக அவர் குரலில் ஒருவிதமான வலி தெரியும். எனினும் இதிலிருந்து மீண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையுடனே அவர் உரையாடலை கொண்டு செல்வார்.

இந்தச் சூழலில் நண்பர் நாகர்கோவில் அசுரன் காலமானதைத் தொடர்ந்து சூழல் ஆர்வலர்கள் இணைந்து நடத்திய இரங்கல் கூட்டத்தில், சற்று தொய்வடைந்திருந்த “பூவுலகின் நண்பர்கள்” அமைப்பை மீண்டும் செயல்படுத்துவது என்று தீர்மானித்து செயல்படத் தொடங்கினோம்.

மரபணு மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது பூவுலகின் நண்பர்களும், பெண்கள் கூட்டிணைப்பும் இணைந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவது என்று முடிவானது. எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த அரசியல் அமைப்போடும், அரசியல் தலைவர்களோடும் பல முரண்பாடுகள் உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து பேசுவது என்பது எனக்கு சாத்தியமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. இதை நம்மாழ்வாரிடம் கேட்டேன்.

என் கேள்விக்கான பதில் தருவதை தவிர்த்துவிட்டு அவர் என்னிடம் வேறு சில கேள்விகளை கேட்டார். அரசியல் அமைப்பின் நடைமுறை குறித்தும், அரசியல் அமைப்பு சட்டம் குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டோம். பின் பன்னாட்டு அரசியல் சட்டங்கள் குறித்து சில கேள்விகளை கேட்டார். எனக்கு தெரிந்ததை கூறினேன். இரு நாடுகளுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படும்போது அந்த பிணக்குகளை தீர்க்க தூதர்கள் பணியாற்றுவது குறித்தும் உரையாடினோம். உரையாடலின் இறுதியில் இந்தியாவை ஆளும் வர்க்கத்திற்கும், ஆளப்படும் வர்க்கத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைவதற்கு ஆளப்படும் வர்க்கத்தின் தூதராக அரசியல் தலைவர்களை சந்திக்கும் கடமை பூவுலகின் நண்பர்கள் அமைப்பிற்கு இருக்கிறது. அந்த அமைப்பில் உள்ள எனக்கும் அந்தக் கடமை இருக்கிறது என்று அவர் கூறினார்.

ஒரு தூதனுக்கு தனிப்பட்ட விருப்பு – வெறுப்புகள் இருக்கக்கூடாது என்று கூறிய நம்மாழ்வார், அந்தத் தூதர் யார் சார்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறாரோ அம்மக்களின் விருப்பு-வெறுப்புகளை நாகரீகமாக கையாள்வதே தூதரின் தலையாய பணி என்று நம்மாழ்வார் எனக்கு உணர்த்தினார். இதை விளக்கும்போது திருக்குறள், வால்டேர் போன்ற அறிஞர்களை மிகச்சரளமாக மேற்கோள் காட்டிப் பேசினார். நம்மாழ்வாரின் இந்த கருத்துரைகள் மரபணு மாற்றத்திற்கு எதிர்ப்பியக்கத்தில் மட்டுமல்லாமல், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களை சந்தித்தபோதும் எனக்கு பயன்பட்டது. இனியும் அவரது கருத்துகள் அவ்வாறே பயன்படும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

இங்கே ஒரு விந்தையான ஒற்றுமையையும் குறிப்பிடலாம். அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் சுப. உதயகுமாரன் எழுதிய “தகராறு – கடந்து சென்றிடும் வழிவகையும், மாற்றியமைத்திடும் நெறிமுறையும்” என்ற நூலும்கூட இதுபோன்று முரண்படும் மனித இனங்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் அரசுத்தூதர் பணியைப்பற்றி பேசுகிறது. இரு பெரும் ஆளுமைகள் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் ஒத்த சிந்தனை கொண்டிருப்பதும், அவ்விருவரும் எனது மனதுக்கு இனிய நண்பர்களாக இருப்பதும் என் நல்வாய்ப்பே!

நம்மாழ்வாரும், நானும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் விவசாயம் தொடர்பான சட்டங்களின் தொகுப்பு இல்லை என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் வேளாண் சட்டங்களின் முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவிப்பு வெளிவந்ததையும், பின்னர் அது சந்தடியின்றி மறக்கப்பட்டதையும் அவரிடம் வருத்தத்துடன் பதிவு செய்தேன்.

மத்திய அரசு நேரடியாக நடத்தும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு முயற்சி அறிவிப்போடு நின்றுபோனதில் வருத்தம் தெரிவித்த நம்மாழ்வார், அதை நாமே முன்னெடுக்கலாமே என்று ஆலோசனை கூறினார். வேளாண் தொடர்புடைய சட்டங்களை தொகுத்த பின்னர் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் அவற்றை அளித்து வேளாண் சட்டம் குறித்த சிறப்பு கல்வித்திட்டங்களை  தொடங்கி நடத்துமாறு வலியுறுத்தலாம் என்று ஆலோசனை கூறிய அவர், பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு செய்பவர்களை வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு ஊக்கம் அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார். அவர் வாழ்நாளில் அந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
(படத்தை சொடுக்கினால் பெரிதாகும்)
மேலும் வெளிநாடுகளில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டங்களை இங்கு அறிமுகம் செய்யவும், இங்குள்ள மக்கள் விரோத சட்டங்களை அறிவுத்தளத்தில் விமர்சனம் செய்து அவற்றிற்கு எதிராக போராடவும் தேவை இருப்பதாக அவர் கருதினார்.

எனினும் நம்மாழ்வாரின் பணிகளை பல தரப்பினரும் தொடர்ந்து செய்யவிருப்பதாக உறுதி ஏற்றுள்ள இன்றைய சூழலில், சட்டம் தொடர்பாக நம்மாழ்வாரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் செயல்படுத்துவதற்காக ஒரு படிப்பு மற்றும் ஆய்வு வட்டம் இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது. அதை நம்மாழ்வாரின் பெயரிலேயே தொடங்குவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்புகள் வெளியாகும். உங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும், பங்கேற்பையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

-சுந்தரராஜன், வழக்குரைஞர்
(E-Mail: gmail@LawyerSundar.com)