09 டிசம்பர், 2008

வி.பி. சிங்குக்கு அஞ்சலி: "இந்தியா டுடே"வை செருப்பால் அடி!

சமூக சீரழிவை கொண்டு வந்தவர் வி.பி. சிங் என்று வக்கிரமாக எழுதிய இந்தியா டுடேவை செருப்பால் அடிப்போம் என்று தோழர் எழுத்தாளர் பாமரன் குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.

அவருடைய கோபத்திற்கு காரணமான இந்தியா டுடே இதழ், மறைந்த வி.பி.சிங் அவர்களுக்கு செலுத்திய அஞ்சலியை வாசகர்களுக்காக கீழே தருகிறேன்.


அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008


மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.


அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.


பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.


அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவேன் என்று 1990 சுதந்திர தின உரையில் வி.பி.சிங் உறுதிபூண்டது ஒரு மாபெரும் புரட்சிகர நடவடிக்கைதான்; வெகுஜனங்களை மயக்குவதற்கான அரசியல் நாடகம். சிறுபான்மை அரசை நடத்திச்சென்ற முதல் பிரதமரான வி.பி.சிங், ஜாதியை முன்னிறுத்தி, தகுதியை புறந்தள்ளிய மண்டல் கமிஷன் அறிக்கை மூலம் சமூக அடுக்கு முறையை குலைத்தார்.


அவர் பதவியிலிருந்த 11 மாதங்களில் அவருடைய திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாமல் போயிருக்கலாம். எனினும் மண்டல் கமிஷன் இந்திய அரசியலின் கட்டமைப்பையே மாற்றி அமைத்தது. ஜாதி செயல் திட்டத்துடன் பல அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பிறந்து வந்தார்கள். அரசியல்வாதியாக வி.பி.சிங் கொள்கைகளின்படி வாழ்ந்தார். அந்தக் கொள்கைகளின் பின்னணியாக என்ன இருந்தது என்பது என்பது வேறு கதை.


அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்த அவரின் இறுதிக்காலத்தில் மதசார்பின்மையின் இஷ்டதெய்வமாகவும் கண்ணுக்கு தெரியாத ஆலோசகராகவும் அவர் இருந்தார். சமூகநீதி அரசியல் என்ற பெயரில் இந்தியாவை உலுக்கிய மனிதர் இறுதியில் நிஜ அரசியலுடன் தொடர்பில்லாமல், கவிதை, ஓவியங்களால் ஆறுதல்பட்டவராக இருந்தார்.


-எஸ். பி.


இந்த அஞ்சலியை பார்த்தவுடன் உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார்கள் என்ற ஆச்சரிய உணர்வே மேலோங்கியது.


மாமனிதர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல் படுத்தியதன்மூலம் பார்ப்பனிய/பனியா என்ற ஆதிக்க சமூகங்களில் மிகப்பெரும் சீரழிவை ஏற்படுத்தினார் என்பதை யார்தான் மறுக்க முடியும்.


மனுதர்மத்தின் துணை கொண்டு இந்தியாவின் அனைத்து துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களை, மக்கள் நலம் சார்ந்து அனைத்து சமூகத்தவர்களும் இந்திய அரசியலின் அனைத்து தளங்களிலும் பங்குபெற செய்வதன்மூலம் சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொன்னது நிஜம்தானே?

பல நூற்றாண்டுகளாய் இந்து மதத்திலும், இந்து மதத்தின் தாக்கம் பெற்ற மற்ற மதங்களிலும் சமூகத்தின் கடைசி கட்டுமானத்தில் பிறந்து உயிருடன் எரிக்கப்பட்டவர்களுக்கும், ஜீவசமாதி அடைந்தவர்களுக்கும் சாந்தி செய்யும்விதமாக அவர்களின் சந்ததிகள் வாழ வழிகாட்டியபோது, பன்னெடுங்காலமாக பிறவி ஒன்றையே தகுதியாகவும், திறமையாகவும் கொண்டாடி ஆதிக்கம் செலுத்தியவர்கள் சற்று வீழ்த்தப்பட்டது உண்மைதானே?


அதுவரை ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் எதிரியாக இருந்தவர்களை புரிந்து கொள்ளாமல், தெய்வத்தின் குரல் எழுதிய தெய்வத்தின் வாரிசு தெய்வங்களை நம்பி தம்முள்ளேயே அடித்துக்கொண்டு கிடந்தவர்களை பொது எதிரியை அடையாளம் காட்டியதன்மூலம் ஒற்றுமைப்படுத்தி, சாமானிய மனிதர்களுக்கும், தெய்வப்பிறவிகளுக்கும் இடையை பிளவை ஏற்படு்ததி தெய்வங்களுக்கு மோசமான நிலையை திரு.வி.பி.சிங் ஏற்படுத்தியது வாஸ்தவம்தானே?

திரு.பி.பி. மண்டல் 1980ம் ஆண்டிலேயே அப்போதைய உள்துறை அமைச்சர் திரு.ஜெயில் சிங்கிடம் வழங்கிய அறிக்கையை பத்து ஆண்டுகள் கழித்தும் மறந்துவிடாமல் தூசிதட்டி எடுத்து, அமல் படுத்தி சாமானிய மக்களுக்கு திரு.வி.பி.சிங் வாழ்வு அளித்தது உண்மைதானே?


போரில் உயிரிழக்கும் ராணுவப்படையினருக்கு சவப்பெட்டியைக்கூட உள்நாட்டில் தயாரிக்க வக்கின்றி வெளிநாட்டில் வாங்கி, அதை வாங்குவதில்கூட ஊழல் புரியும் நாட்டில், அரசியல் எதிரிகள்கூட விமர்சனம் செய்ய வழியின்றி வி.பி.சிங் வாழ்ந்து மறைந்தது சிறப்பானதுதானே?

பதவி வெறி பிடித்து மகாபாரதத்தையும் மிஞ்சும் அரசியல் சூழ்ச்சிகள் நடைபெறும் நாட்டில் தனக்கான பணி முடிந்தது என்று பதவிக்கு அலையாமல் சமூகப்பணியும், இலக்கியச்சுவையும் போதும் என்று முடிவெடுத்தது பெருமைதானே?


இது அனைத்தும் தெரிந்த இந்தியா டுடே இதழ், அதற்கே உரிய பாணியில் அஞ்சலி செலுத்தியது. என்ன, அந்த இதழின் உரிமையாளர்களும், அவர்களின் உறவினர்களும் சமூகத்தின் மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை தகர்த்த மனிதரைப்பற்றி நினைக்கும்போதே இயல்பாக வரும் வயிற்றெரிச்சல் சற்று அவர்களின் கட்டுப்பாட்டை தளர்த்தி அவர்களின் சுயமுகத்தை காட்டிவிட்டது, அவ்வளவுதான்.

இந்தியா டுடே இதழின் தரம் குறித்து அனைவருக்குமே தெரிந்திருக்கும். அவ்வபோது பாலச்சந்தர் திரைப்பட பாணியில் கருத்துக்கணிப்பு நடத்தி விற்பனையை தக்க வைத்துக் கொள்வதும், அதன்மூலம் போலி மருத்துவக்கல்வி நிறுவனங்களுக்கு விளம்பரம் வெளியிட்டு பொருளீட்டுவதும் அதற்கு புதிதல்ல.


**********


341 நாட்கள் பதவியிலிருந்த வி.பி.சிங் நாத்திகர் அல்ல. ஆனாலும் மதம் என்பதை அரசியலோடு இணைத்துப்பார்க்க மறுத்தவர். எனவேதான் அயோத்தியில் கரசேவை செய்வதற்காக பாரதிய ஜனதாவும், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளும் ரதயாத்திரை சென்றபோது ராணுவத்தை வைத்து அடக்கினார். அதன் விளைவாக பதவியை இழந்தார். அப்போதும் அவர் கம்பீரமாக சொன்னார்:

ஆம்... நான் தோற்கடிக்கப்பட்டுவிட்டேன். ஆனாலும், பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் செயல்தி்ட்டத்தில் சேர்த்த பின்னர்...!


அரச குடும்பத்தில் பிறந்தாலும் சாமானிய மக்கள் மீது பேரன்பு கொண்டவராக விளங்கிய வி.பி.சிங் அரசியலிலிருந்து விலகினாலும், சமூகத்தோடு தொடர்புடையவராகவே இருந்தார். நாட்டில் பயங்கரவாதம் பெருகிவருவதாக அவரிடம் கருத்து கேட்டபோது அவர் கூறினார்: உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்... சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்... லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். ஆனால்... உனது விலை பொருளுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம் என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால், நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். ஆனால், அதற்கு என் உடல்நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.


பின்குறிப்பு: இதைப்படித்த பிறகும் இந்தியா டுடே-வை செருப்பால் அடித்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு ஒரு தகவல். இந்த தலையங்கம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழி பெயர்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டபோதே சென்னை அலுவலகத்தில் இந்த இரங்கலுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வரும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் டெல்லி தலைமையகம் தனது "கொள்கை முடிவி"ல் உறுதியாக இருந்துள்ளது. எனவே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க விரும்புபவர்களுக்கு வசதியாக டெல்லி அலுவலக முகவரி, இதோ:

Prabhu Chawla,

Editor,

India Today & Group Editorial Director,
F-14/15, Connaught Place,

New Delhi 110 001.

Tel: 011-23315801-04 (board).

மின்னஞ்சல்: RATNAM@intoday.com

28 நவம்பர், 2008

மும்பை பயங்கரவாதம் – தமிழக மழை, வெள்ளம் - பலி – சில கேள்விகள்

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பலரையும் பலவிதத்தில் பாதித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொலைக்காட்சி ஊடகங்களின் அத்துமீறல் குறித்து பரந்த அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இல்லாத அரசியல்வாதிகள், பொடாவை போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டுவந்தால்தான் இதுபோன்ற பயங்கரவாதங்களை தடுக்க முடியும் என்று அறுதியிட்டு கூறுகின்றனர்.
தாக்குதல் சம்பவங்களை சினிமா காட்சிகள்போல தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி மலினப்படுத்துவதாக எழுதும் அச்சு ஊடகங்கள் அனைத்தும், சினிமா ஸ்டில்களுக்கு சற்றும் குறைவில்லாத புகைப்படங்களை பிரசுரிக்கின்றன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த எத்தரப்பும் சாராத பொதுமக்கள், அரசுப்படை வீரர்கள், தீவிர/பயங்கரவாதிகள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்திவிட்டு வேறு சில விவ(கா)ரங்களை பார்ப்போம்.

*****

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இயங்கும் முக்கியத்துறைகளில் ஒன்று தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Record Bureau). தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் ISO 9001 : 2000 சான்றிதழ் பெற்ற அமைப்பு.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் நடக்கும் குற்றங்களை ஆவணமாக பதிவு செய்து வெளியிடுகிறது. இதில் நாட்டில் நடக்கும் தற்கொலைகளும் அடக்கம்.

இந்த புள்ளி விவரங்களின்படி கடந்த 2007ம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,22,637.

மகாராஷ்டிராவில் 15,184(12.4%)பேரும், ஆந்திராவில் 14,882(12.1%) பேரும், மேற்கு வங்கத்தில் 14,860 (12.1%) பேரும், தமிழ்நாட்டில் 13,811 (11.3%) பேரும், கர்நாடகத்தில் 12,304 (10%) பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்த 5 மாநிலங்களில் மட்டும் 57.9 சதவீத தற்கொலைகள் நடந்துள்ள நிலையில், மீதமுள்ள 23 மாநிலங்களிலும் 42.1 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வறுமை, நோய், குடும்ப பிரசினை போன்ற காரணங்களுக்காகவே அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 41.9 சதவீதம் பேர் விவசாயம், சிறு வியாபாரம் போன்ற சுயதொழில் செய்தவர்கள். குடும்பத்தலைவிகள் 19.7%-ம், பணியிலிருப்பவர்கள் 11.9%-ம், வேலை வாய்ப்பற்றோர் 6.9%-ம், மாணவர்கள் 5.1%-ம், மற்றவர்கள் 14.5%-ம் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பள்ளியிறுதிக்கு மேல் படிக்காதவர்கள்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் விஷம் அருந்தியோ, தூக்கில் தொங்கியோ தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 637 பேரில் ஓரிருவர் நமக்கு தெரிந்தவர்களாக இருக்கக்கூடும்.
ஆனால் அவர்களின் இந்த அகால மரணத்திற்கான காரணம் ஏதோ ஒரு வகையில் சமூக பயங்கரவாதமாக இருப்பதை நாம் உணருவதில்லை.


தற்கொலைக்கு தூண்டுவதை குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. ஆனால் இந்த லட்சக்கணக்கான தற்கொலைகளை தூண்டியதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை.

வறுமையோ, வேலையின்மையோ, நோய்க்கு சிகிச்சை பெற முடியாத நிலையோ பயங்கரவாதமாக நமக்கு தெரிவதில்லை. ஏனெனில் இவை தனிநபர் சார்ந்த விஷயங்களாக நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளாக ஜாதகங்களும். ஜோசியங்களும், தன்னம்பிக்கை புத்தகங்களும் நம்மிடம் திணிக்கப்படுகிறது.

இந்த பிரசினைகள் குறித்து விவாதங்களை தொடங்கிய பொருளியல் அறிஞர் அமார்த்ய சென்னுக்கு நோபல் பரிசு கொடுத்து அவரை கருத்தரங்குகளில் மட்டுமே பங்கு பெறும் காட்சிப் பொருளாக்கிவிட்டோம். அவரது கொள்கைகள் எந்த பொருளாதார பள்ளியிலும், தொழில் மேலாண்மை பள்ளியிலும் பாடநூலாக இல்லாமல் செய்து விட்டோம்.

எனவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நமது கவனத்துக்கு வராமலே போய்விடுகிறது.

******

மேற்கூறியவாறு தற்கொலை செய்து கொள்வதற்கும்கூட ஒரு துணிவு தேவைப்படுகிறது. அந்த துணிவு இல்லாத சிலர்கூட மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும்.
அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குக்கூட பொருளீட்ட முடியாத இளைஞர்கள்தான், மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களின் ஆயுதங்களாக மாறிப்போகின்றனர்.

இந்த பகடைக்காய்கள்தான் சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டு, மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களாலும் வஞ்சிக்கப்படுகின்றனர்.
*****

தமிழகத்தில் பெய்துவரும் மழையில்கூட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது நமது கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஏனெனில் இந்த மரணங்களை ஊடகங்கள் பரபரப்பான செய்திகளாக தருவதில்லை (எதிர்க்கட்சி ஊடகங்களைத் தவிர).

இத்தகைய வெள்ளம் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல, சுனாமியைப்போன்று. ஆனாலும் இந்த வெள்ளம் வரும்போதெல்லாம் பல உயிர்கள் பறிபோகின்றனவே!

இது ஏன் நமக்கு தீவிரவாத தாக்குதல் அளவுக்கு பாதிப்பதில்லை? ஏரி, குளங்களை ஆக்கிரமித்து பேருந்து நிலையங்களும், ரயில் பாதைகளும் அமைக்கும்போது அரசுக்கும் பொறுப்பு இருப்பதில்லை. அதைப்பார்க்கும் கல்வியாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ அது அழிவுக்கு வகுக்கும் வழியாக தெரிவதுமில்லை. அந்த இடங்களில் வெள்ளம் தாக்கும்போதுகூட மழையின்மீதுதான் நமக்கு கோபம் வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க தவறியவர்கள்மீது கோபம் வருவதில்லை. ஏனென்றால் இதற்கும் கோபம் வரவேண்டும் என்று யாரும் நமக்கு உணர்த்தவில்லை.

நான்கு நாள் மழைக்குக்கூட தாங்காத சாலையை, ரயில் பாதையை அமைக்கும் அரசு அமைப்புகள் மீது நமக்கு கோபம் வருவதில்லை. ஏனெனில் அவை அனைத்தும் நமது வரிப்பணத்தில்தான் அமைக்கப்படுகிறது என்ற உண்மை நம்மில் பலருக்கும் உறைப்பதில்லை.

ஆனால் தீவிரவாத தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகும்போது மட்டும் நமது தேசபக்தி பொங்குகிறது. பொடா சட்டத்தை ஆதரிப்பது முதல், மனசாட்சியுள்ள ஒரு சர்வாதிகாரி(!) ஆட்சிக்கு வந்தால்தான் நாடு உருப்படும் என்ற அளவிற்கு பேச ஆரம்பிக்கிறோம். இதற்கான பயிற்சியைத்தான் நமது சமூகமும், கல்விமுறையும், ஊடகங்களும் நமக்கு அளித்துள்ளன.

வறுமை, வேலையின்மை, நோயை உருவாக்கும் சூழல், நோயை தீர்க்கமுடியாத நிலைமை, இவை அனைத்திற்கும் வழிவகுக்கும் ஊழல் ஆகியவை, எப்போது நமக்கு தீவிரவாதமாக/ பயங்கவாதமாக/ வன்முறையாக தெரியும்?

ஊழலில் ஈடுபடுவதன்மூலமாக லட்சக்கணக்கான மக்களை தற்கொலைசெய்துகொள்ள தூண்டுபவர்களுக்கும், மற்ற வகை அகால மரணங்களைஏற்படுத்துபவர்களுக்கும் எந்த பொடா சட்டத்தின் மூலம், யார் தண்டனைவழங்குவது?