14 ஜனவரி, 2017

தமிழக விவசாயிகள் கொலைச்சதி – ஒரு சுருக்கமான வரலாறு

தமிழ்நாட்டில் விவசாயிகளின் அகால மரணம் முன் எப்போதும் இல்லாதவகையில் அதிகரித்து வருவதே தேசத்தின் அவமானம் என்றுதான் சொல்ல வேண்டும். தேசம் என்பது நாம் தேர்ந்தெடுக்கும் அரசு மட்டுமல்ல, நாமும்தான்! 


விவசாயிகளின் இந்த பேரவலம் குறிப்பிட்ட காலத்தில் திடீரென நிகழ்ந்துவிடவில்லை. அரசின் தவறான கொள்கைகளாலும், குடிமக்களின் பொறுப்பின்மையாலும் நீண்டகாலமாக இதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. 

இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டிஷார் இந்தியாவின் இயற்கை வளங்களை, தங்களுக்கு பொருளீட்டும் மூலப்பொருளாக, அடிப்படை ஆதாரமாக பார்த்தனர். சூழல் குறித்த எந்த புரிதலுமற்று, பல தவறான கருத்துகளின் அடிப்படையில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. மாற்றி அமைக்கப்பட்டன. மலை வளமும், வன வளமும் அழிக்கப்பட்டு காபி, தேயிலை போன்ற பணப்பயிர்கள் வளர்க்கப்பட்டன. நீர் வளத்தை பாதுகாக்கும் புல்வெளிகளின் முக்கியத்துவம் தெரியாமல் அவை பயனற்று இருப்பதாக புரிந்துகொள்ளப்பட்டு வேறு பயன்பாட்டுக்கு மாற்றி அமைக்கப்பட்டன. நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. மழையை உருவாக்கும் சோலைக்காடுகளைக் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை பலவேறு வழிகளிலும் ஆக்கிரமிக்கப்பட்டது. 

வெளிநாட்டுக்காரனுக்கு இந்தியாவின் இயற்கை வளங்கள் குறித்து அறிவோ, ஆர்வமோ இருந்திருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறிய பின் சுதந்திர நாட்டின் அரசுகளும் அதே பார்வையில்தான் தொடர்ந்து செயல்பட்டன என்பதுதான் கொடுமையான துன்பியல் சம்பவங்கள்.

இந்தியா முழுவதும் இயற்கை வளங்களான மலைகள், காடுகள், நதிகள், நீர்நிலைகள் அனைத்தும் கட்டற்று சூறையாடப்பட்டு வருகின்றன. பன்னாட்டு வர்த்தகக் கழகங்களும், அவற்றின் உள்ளூர் பங்காளிகளும் இந்தியாவின் இயற்கை வளங்களை களவாடி வருகின்றனர். ஆட்சியில் இருப்போரும், அதிகார வர்க்கமும் இந்த கொள்ளையின் பங்காளிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்திய வேளாண்மையின் அடிக்கட்டமைப்பாக விளங்கும் நில வளமும், நீர் வளமும் திட்டமிட்டு பாழடிக்கப்படுகின்றன. இதற்கிடையில் இந்திய வேளாண்மையை மேம்படுத்துவதாகக் கூறியும் ஒரு பன்னாட்டு சதி இந்தியாவில் அரங்கேற்றப்படுகிறது. 

பசுமைப் புரட்சியின் வன்முறை

குறிப்பாக சுதந்திரம் பெற்ற இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டதாக கூறி “பசுமைப் புரட்சி” அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பசுமைப்புரட்சி இந்தியாவின் உணவு உற்பத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக அதிகம். 

பசுமைப் புரட்சியின் வன்முறை என்ற பெயரில் சூழலியலாளர் வந்தனா சிவா “பசுமைப் புரட்சியின் வன்முற” என்ற பெயரில் ஒரு நூலையே எழுதி இருக்கிறார். (இந்நூலின் தமிழாக்கம் "பூவுலகின் நண்பர்கள்" சார்பில் வெளியிடப்பட்டுள்ளது) இந்தியாவின் பாரம்பரிய விதை ரகங்களுக்கு பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட விதை ரகங்களும், அவற்றை விளைவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நமது விவசாயிகளின் வாழ்வை சீரழித்த சோக வரலாறு அந்த நூலில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள மண்ணுக்கும், பிற சூழ்நிலைகளுக்கும், மனிதர்களுக்கும் உகந்த பல வகையான நெல் ரகங்கள் இருந்தன. கடும் வறட்சியையும், அதிக வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. இந்த நெல் ரகங்கள் பல்வேறு காலச்சூழல்களுக்கும், மனித தேவைகளுக்கும் உரிய மருத்துவ குணங்களோடு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தலைசிறந்த வேளாண்மை அறிவியலாளராக இருந்த முனைவர் ஆர். ஹெச்.  ரிச்சாரியா என்பவர் சேகரித்து வைத்திருந்த சுமார் 19,000 பாரம்பரிய அரிசி ரகங்களை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துவிட்டு, தரம்குறைந்த நெல் ரகங்களை இறக்குமதி செய்த அன்றைய வேளாண்மைத்துறை அமைச்சர் சி. சுப்ரமணியமும், இந்திய வேளாண் துறையின் நிரந்தர ஆலோசகருமான எம். எஸ். சுவாமிநாதனும்தான் தமிழ்நாடு உட்பட இந்தியாவை தொடர்ந்து ஆட்சி செய்யும் அரசுகளின் வேளாண்மை வழிகாட்டிகள். (முழு விவரங்கள் பூவுலகின் நண்பர்கள் வெளியீடான “மாபெரும் விதைக் கொள்ளை” என்ற குறுநூலில்)

பசுமைப் புரட்சியை நியாயப்படுத்தும் சில கருத்துகள் சிலரிடம் உண்டு. அன்று நிலவிய பஞ்சத்திற்கு தீர்வாகவே பசுமைப்புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது என்று நம்பிக்கை நிலவுகிறது. உண்மை வேறானது. தமிழ்நாட்டின் உணவுப் பழக்கம் முதன்மையாக நெல் அரிசியை அடிப்படையாக கொண்டது அல்ல. பல சிறுதானியங்களை அடிப்படையாக கொண்டதே தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின்  பாரம்பரிய உணவுப் பழக்கம். அரிசி உணவு என்பது விழாக்கால சிறப்பு   உணவாகவே பயன்படுத்தப் பட்டிருக்கிறது. நமது முன்னோர்களின் உடல் வளத்திற்கும், நமது உடல்நல நலிவிற்கும் இந்த உணவுப் பழக்க மாறுபாட்டிற்கும் முக்கிய தொடர்பு இருக்கிறது. சிறுதானிய உணவுப் பழக்கத்தை புறக்கணித்து அரிசி உணவை மட்டுமே பிரதான உணவாக மாற்றியதில் பல்வேறு வர்க்கத்தினரின் சுயநலமும், வர்த்தக நலமும் அடங்கி இருந்தது. இன்று ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற தொற்றாத நோய்களின் பெருக்கத்திற்கு நமது இந்த உணவுப் பழக்கமே காரணம் என்று சமூக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில் அரிசிக்கு ஏற்பட்ட பற்றாக்குறை உணவுப்பஞ்சமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இதற்கு பசுமைப் புரட்சியே தீர்வு என்ற சதித்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 

பசுமைப் புரட்சியின் பெயரால் அறிமுகம் செய்யப்பட்ட நெல் ரகங்கள் அனைத்தும் பலவிதமான மோசமான விளைவுகளை ஏற்படுத்தின. அதில் முக்கியமானது கால்நடைகளுக்கான தீவனம் இல்லாமல் போனது. இந்த நெல் ரகங்கள் அனைத்தும் குட்டை வகையை சேர்ந்தவை. எனவே கால்நடைகளின் தீவனமான வைக்கோலின் உற்பத்தி மிகவும் குறைந்தது. இந்த ரகங்கள் அதிக நீர்வளத்தை சார்ந்திருப்பவை. மேலும் இயல்பான வளர்ச்சித் திறனும், நோய் எதிர்ப்புத் திறனும் குறைந்தவை. எனவே ரசாயன உரங்களும், பூச்சி மருந்துகளும் இல்லாமல் இந்த ரகங்களில் விளைச்சல் காண முடியாது. இந்த ரசாயன உரங்கள் அனைத்தும், இரண்டாம் உலகப்போரில் ஆயுதம் தயாரிப்பதற்காக சேகரிக்கப்பட்ட பொட்டாஷியம், பாஸ்பேட், நைட்ரேட் ஆகிய ஆபத்தான ரசாயனங்களால் உருவாக்கப்பட்டவை. இந்த ரசாயன உரங்கள் மண்ணின் தன்மையை குலைத்தன. மேலும் விலை அதிகமுள்ள இந்த ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் விவசாயிகளின் செலவை பலமடங்கு அதிகரித்தது. 

பசுமைப் புரட்சி(Green Revolution)யின் தொடர்ச்சியாக இரண்டாம் பசுமைப் புரட்சி அல்லது என்றென்றும் பசுமைப் புரட்சி (Evergreen Revolution) அறிமுகம் ஆனது. 

முதலாவது பசுமைப் புரட்சியின் அறிமுகங்களான ரசாயன உரங்களுக்கும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தி அவர்களை கடன்பொறியில் சிக்க வைத்ததோடு, எதிர்பார்த்த விளைச்சலும் கிடைக்க வில்லை என்பதை விவசாய விஞ்ஞானிகள் தாமதமாக ஒப்புக் கொண்டனர். எனவே இவற்றுக்கு மாற்றாக மரபணு மாற்று விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த தொழில்நுட்பம், அறிவுச் சொத்துரிமை சட்டம் என்ற பெயரில் விதை மீதான உரிமைகளையே விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆதரவாளர்கள் வழங்கிய வாக்குறுதியில் கூறப்பட்ட எந்த நன்மையையும் விவசாயிகளுக்கோ, நுகர்வோருக்கோ கிடைக்கவில்லை. மாறாக இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம், அந்த விதை மீதான அறிவுச்சொத்துரிமையை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கே கொள்ளை லாபத்தை அள்ளி குவிக்கிறது.

பசுமைப் புரட்சியையும், இரண்டாம் பசுமைப் புரட்சியையும் மக்களிடம் எடுத்துச் செல்லும் வாகனமாக மத்திய - மாநில வேளாண்மை அமைச்சகங்களும், வேளாண்மைப் பல்கலைக் கழகங்களும் செயல்பட்டன. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களின் தொடர்பால் பயனடைந்த அமைச்சரகங்கள் இந்தியாவின் வேளாண்மை தொடர்பான கொள்கை முடிவுகளை வகுத்தன. அந்த கொள்கை முடிவுகள் அனைத்தும் நமது பாரம்பரிய விவசாயிகளுக்கு எதிராகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருக்கின்றன. 

வேளாண் துறைக்கான பணியாளர்களை உருவாக்கிய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களும் சுயசிந்தனை அற்ற - அறிவியலை மதம் போல விமரிசனமற்று வழிபடும் வேளாண்மை பட்டதாரிகளை உருவாக்கின. இந்த வேளாண்மைப் பட்டதாரிகள், நமது விவசாயிகளின் பாரம்பரிய வேளாண்மை அறிவை புறக்கணித்து, பன்னாட்டு நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட வேளாண்மை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் பரப்பினர். 

அரசும், அரசுத்துறைகளும் மக்களை காப்பதற்காகவே இருக்கின்றன என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி இருந்த அப்பாவி விவசாயிகள், பன்னாட்டு நிறுவனங்கள் – வேளாண் அமைச்சகம் – வேளாண்மை பல்கலைக் கழகங்கள் கூடிச் செய்த சதிக்கு பலியானார்கள். இதற்கு இந்தியா கொடுத்த விலை மிக அதிகம். உதாரணமாக இந்திய மாநிலங்களிலேயே மிகவும் செழிப்பான மாநிலமான பஞ்சாப் மாநில விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்டனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

தமிழக விவசாயிகளின் அவலங்கள்

பசுமைப் புரட்சியின் மாயையிலிருந்து நமது அண்டை மாநிலங்கள் அனைத்தும் நம்மைவிட விரைவில் மீண்டுவிட்டன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் தங்களது வேளாண்மைக் கொள்கையாக இயற்கை வேளாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. அந்த மாநில அரசுகளின் ஆலோசகராக செயல்பட்டவர் நம் தமிழ் மண்ணைச் சேர்ந்த இயற்கை வேளாண்மை நிபுணர் கோ. நம்மாழ்வார். ஆனால் நம்மாழ்வார் பிறந்த தமிழ்நாட்டில் அவரது ஆலோசனையே கேட்க தமிழ்நாடு அரசு இன்றுவரை முன்வரவில்லை. 

தமிழக வேளாண்மை பல்கலைக் கழகமும், தமிழ்நாடு வேளாண்மைத் துறையும் பசுமைப் புரட்சியை தீவிரமாக பரப்பின. ஆங்கிலம் படித்தவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்று தவறாக நம்பிய விவசாயிகள் மோசம் போனார்கள். 

இயற்கையை ஐந்து திணைகளாக பிரித்து வாழ்ந்த தமிழினம், தற்போது இயற்கை குறித்த புரிதலை முழுவதுமாக துறந்துவிட்டது. தமது வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியமான நீர்நிலைகளை ஆக்கிரமித்து அழிக்கும் விந்தையான இனமாகவே தமிழினத்தை வரலாறு பதிவு செய்யும். ஆறுகளை மணல் குவாரிகளாகவும், ஏரிகளை ஆக்கிரமிக்கத் தயாராக இருக்கும் புறம்போக்கு நிலமாகவும் பார்க்கும் விபரீதமான மனநிலை தனிநபர்களிடம் மட்டுமல்ல, அரசிடமும் இருக்கிறது. இதனால் தமிழ் மாநிலத்தின் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டது. 

சிறு விவசாயிகளோ வேறுபல சிக்கல்களையும் கூடுதலாக சந்தித்தனர். குறிப்பாக அவர்களது நிலத்தை அருகிலுள்ள அரசியல் பெரும்புள்ளிக்கு மலிவு விலைக்கு விற்க மறுத்த காரணத்தால் பாசனத்திற்கான நீர் தடுக்கப்பட்டது. ஒரு கிராமத்திற்கு செல்லவேண்டிய மொத்த நீரையும் அப்பகுதியில் செல்வாக்காக இருந்த அரசியல்வாதிகளின் நிலத்திற்கு மடைமாற்றப்பட்டது. இத்தகைய கயமைத்தனத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த எந்த கட்சியும் விதிவிலக்காக இல்லை. இந்த அயோக்கியத்தனத்திற்கு அரசின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் துணை நின்றனர். இதனால் மனம் வெறுத்த விவசாயிகளில் பலர் விவசாயத்திலிருந்தே வெளியேறினர். கோக், பெப்சி குளிர்பான நிறுவனங்களுக்கு கிடைத்த நீர் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. 

விவசாய விளைபொருட்களுக்கான விலையை, அதை உற்பத்தி செய்த விவசாயி நிர்ணயிக்க இயலாத அரசின் கொள்கை விவசாயிகளின் மீதான மிகப்பெரும் தாக்குதலாகும். பொது விநியோக முறைக்காக விவசாயிகளிடம் பயிர்களை கொள்முதல் செய்த அரசு, அதற்கான நியாயவிலையை வழங்காமல் அநீதி இழைத்தது. விவசாயிகளின் இயல்பான உரிமைகளை சுரண்டிய அரசு, அதைமீறியும் அவர்கள் உழைத்து உற்பத்தி செய்த விளைபொருட்களை அநீதியாக கொள்முதல் செய்தது. 

விவசாயிகளின் நிலம் கைமாறியது. நிலத்தை கைமாற்ற மறுத்தவர்களுக்கு நீர் மறுக்கப்பட்டது. இரண்டும் கிடைத்தவர்களுக்கு நம் பாரம்பரிய வேளாண்மை மறந்து போயிருந்தது. குறிப்பாக சுழற்சி முறையில் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள் வழக்கொழிந்து போயிருந்தன. ஒரே பயிரை மீண்டும் மீண்டும் தொடர்ந்து பயிரிடும் முறை பின்பற்றப்பட்டது. இதன் காரணமாக மண்ணின் இயற்கை வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை ஈடு செய்வதற்காக செயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இது விவசாயிகளுக்கு கூடுதல் பொருட் செலவை ஏற்படுத்தின. 

விவசாய விளைபொருட்களை அறுவடைக்கு பின் கையாளும் தொழில்நுட்பமும் தேவையான அளவில் வளர்ச்சி அடையவில்லை. எனவே உரிய விலை கிடைக்காத விளைபொருட்களை விவசாயிகள் அழிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. குறிப்பாக அழுகும் தன்மை வாய்ந்த காய்கள், கனிகள் போன்றவை விற்பனை செய்யப்படாமல் விவசாயிகளை பெரும் பொருள் இழப்பில் ஆழ்த்தியது. விளைபொருட்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்வதும், அறுவடையே செய்யாமல் நிலத்திலேயே காயவிட்டு விவசாயி துன்பம் அடைவதும் நகரவாசிகளின் கவனத்தை பெரும்பாலும் கவர்வதில்லை. 

ஆக மொத்தத்தில் வேளாண்மை என்பது மத்திய, மாநில அரசுகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. 

விவசாயிகளின் தரப்பிலும் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கரும்பு போன்ற பணப்பயிர்கள் மிக அதிக நீர்வளம் தேவைப்படும் பயிர்களாகும். இப்பயிர்கள் மீது நமது விவசாயிகள் தற்காலிக பொருளாதார பலன்களை மட்டுமே எதிர்பார்க்கும் பொருளற்ற காதல் கொண்டுள்ளனர். மேலும் பொதுவான வேளாண்மை பிரச்சினைகளுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு ஒற்றுமையுடன் போராடுவதற்கு பெரும் தடையாக இருப்பது அவர்களது மனதில் உட்கிடையாக இருக்கும் ஜாதிப்பற்றும், வெளிப்படையாகத் தெரியும் அரசியல்கட்சி சார்புத் தன்மையுமே.

நாட்டு மாடுகள்... உண்மை நிலை என்ன?

பாரம்பரிய வேளாண்மை முறையில் நாட்டு மாடுகளின் பங்களிப்பை தவிர்க்க இயலாது. மாடுகளின் உழைப்பு மட்டுமல்ல, மாடுகளின் சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளும் மிகவும் முக்கியமான பங்களிப்பாகும். இயற்கையான உரமாகவும், பூச்சிக்கொல்லியாகவும் மாட்டின் கழிவுப் பொருட்களே பயன்படுத்தப்பட்டன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாடுகளின் அழிவு என்பது திடீரென ஏற்பட்டதல்ல. 

பசுமைப் புரட்சியின் விளைவாக அறிமுகம் செய்யப்பட்ட பெரும்பாலான நெல்ரகங்கள் குட்டையானவையே. இவற்றில்  வைக்கோல் மிகக்குறைந்த அளவே இருக்கும். இதன் காரணமாக கால்நடைகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. வைக்கோலின் அளவு குறைந்த அதே நேரத்தில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் பயிரிடும் முறையும் முக்கியத்துவம் இழந்தது. கால்நடைகளுக்கு உணவளிக்கவும் வணிக நிறுவனங்களை நம்பி இருக்க வேண்டிய அவலம் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அறிவியல் தொழில்நுட்பத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இயந்திரமான டிராக்டர், வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு மாட்டின் தேவையை இல்லாமல் ஆக்கியது. மாடுகளின் இழப்பு விவசாயிகளுக்கு பலவிதங்களிலும் இழப்புகளை ஏற்படுத்தினாலும், மாடுகளை வளர்ப்பதற்கு தேவையான அடிக்கட்டமைப்பு குலைக்கப்பட்டது. 

இவ்வாறு விவசாயிகளின் வாழ்க்கையிலிருந்து மாடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கான ஒரே வழியாக ஏறு தழுவுதலை மட்டுமே முன் நிறுத்துவது ஏற்க முடியாத வாதமாகும். வளமாக வாழும் ஒரு சமூகத்தில் மட்டுமே ஏறு தழுவுதல் போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற இயலும். விவசாயிகள் வாழ வழியின்றி மரணத்தை தழுவும் அவலமான நேரத்தில், ஏறு தழுவுதலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆபாசமாக பார்க்கப்படலாம். நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதற்கு பல்வேறு அம்சங்களை கொண்ட திட்டங்கள் தேவை, அதன் ஒரு கட்டமாக ஏறு தழுவுதலும் இருக்க வேண்டும். 
நாம் என்ன செய்ய வேண்டும்?

விவசாயிகளின் தொடர் அகால மரணத்தை தன்னிச்சையான அம்சமாக கருத இயலாது. உலகிற்கு உணவளிக்கும் இனத்தை, இந்த சமூகம் கைவிடுவதன் மூலம் படுகொலை செய்வதாகவே பொருள் கொள்ள வேண்டும். அரசின் தவறான கொள்கைகள், குடிமக்களின் பொறுப்பற்ற போக்கு ஆகிய அனைத்தும் விவசாயிகளின் இந்த படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். உணவு தேவைக்காக விவசாயிகளை சார்ந்து வாழும் எவரொருவரும் இந்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இயலாது. 

மற்ற துறைகளைப் போல வேளாண்மை என்பது சாதாரண தொழில் அல்ல. அது உலகு முழுவதுமுள்ள மனிதர்களுக்கு உணவளிக்கும் சமூக செயல்பாடு. ஒரு குடும்பத்தில் மூத்த வாரிசுக்கு இருக்கும் கூடுதல் பொறுப்பும், பணிச்சுமையும் வேளாண் சமூகத்திற்கு உள்ளது. அதே நேரம் மூத்த வாரிசின் பொறுப்பையும், பணிச்சுமையையும் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை மற்ற தரப்பினர் அனைவருக்கும் உள்ளது. இதை மறந்துவிட்டதன் பலனையே நாம் இப்போது அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறோம். 

உணவு உற்பத்தியில் விவசாயிகள் நேரடியாக களத்தில் இருந்தாலும் மற்ற துறை சார்ந்தவர்களும் வேளாண்மை குறித்து தேவையான அறிவோடும், அக்கறையோடும் இருக்க வேண்டும். ஆனால் இந்த கண்ணி அறுபட்டது. வேளாண் குடும்பத்தில் பிறந்த பலரும் ஆங்கிலக் கல்வியை பயின்ற பின்னர் வேளாண்மையிலிருந்து முற்றிலுமாக துண்டித்துக் கொண்டனர். வேளாண்மை என்பது மெல்ல, மெல்ல சமூகத்தால் புறக்கணிக்கபடும் துறையாக மாறியது. இந்தியாவின் பாரம்பரிய வேளாண்மைக்கு எதிராக நிற்கும் உணவுப் பழக்கத்திற்கு, பொருட்களுக்கு ஆங்கிலக் கல்வி படித்த நடுத்தர வர்க்கம் உளவியல் ரீதியாக அடிமையாகிப் போனார்கள். 

விவசாயத்திற்கு வருவாய் அளிக்கக்கூடிய இளநீருக்கு, மோருக்கு பதிலாக பெப்சி, கோக் நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களாக மாறி தம் உழைப்பை அந்த நிறுவனங்களுக்கு லாபமாக அளித்தனர். அல்லது நமது விவசாயிகளை அழித்தனர். நம் பாரம்பரிய உணவுகளை புறக்கணித்து இறக்குமதி உணவுகளுக்கு ரசிகராயினர். 

விவசாயிகள் இல்லாத ஒரு சமூகம் வாழ முடியாது. இதை உணராமல் நாம் விவசாயிகளை ஏறக்குறைய அழிந்துவரும் இனமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இதை உடனடியாக மாற்றி அமைத்தாக வேண்டும். நம் சமூகத்தின் முக்கிய அங்கமாக வேளாண் குடிமக்களே இருக்கின்றனர் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். நம் வாழ்வின் அனைத்து அம்சங்களும் வேளாண்மையை முன்னிலைப்படுத்தும் சூழல் பார்வையோடு கட்டமைக்கப்பட வேண்டும். 

குறிப்பாக அரசின் அனைத்துக் கொள்கைகளும் வேளாண்மையை பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே அமைய வேண்டும். வேளாண் துறையை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் நமது மண்ணில் இடமில்லை என்ற நிலையை உறுதி செய்ய வேண்டும். விளை நிலங்களை, நீர் நிலைகளை, சுற்றுச்சூழலை எதன் பொருட்டும் சீர்குலைக்க மாட்டோம் என்று அரசும், குடிமைச் சமூகமும் உறுதி ஏற்க வேண்டும். இதுவரை சீர்குலைக்கப்பட்ட விளைநிலங்களை, நீர்நிலைகளை, சுற்றுச்சூழலை மீட்பதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும். முழுவதும் சுயச்சார்பான வேளாண்மை முறைகளை உருவாக்க வேண்டும். வேளாண் தொழிலில் ஈடுபட்டுள்ள நில உரிமையாளர்களான விவசாயிகளுக்கும், நில உரிமை இல்லாத விவசாயக் கூலிகளுக்கும் வருவாய் உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். 

நுகர்வோர்கள் தமக்குத் தேவைப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குவதற்கு முன்வர வேண்டும். உணவுப் பொருட்களை அந்நிய நாட்டு நிறுவனங்களிடமிருந்தோ, பெரும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்தோ வாங்க மாட்டோம் என்று நுகர்வோர்கள் உறுதி ஏற்க வேண்டும். 

தொடக்கக் கல்வியில் வேளாண்மைப் பாடங்கள் கட்டாயமாக இடம் பெற வேண்டும். வேளாண் விளை பொருட்களை நேரடியாக உழவர்களிடம் வாங்கி பயன்படுத்தும் கலாசாரத்திற்கு அனைவரும் மாற வேண்டும். விவசாயிகளை உடனடியாக பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினையும், விவசாயம் சாராத மக்களை உரிய காலத்தில் பாதிக்கும். இதை உணர்தலும், விவசாயிகள் தொடர்பான பிரசினைகளில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்துதலும் மிகவும் இன்றியமையாத பணிகளாகும். 

இவை நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே விவசாயிகளின் அகால மரணங்களை தடுக்க முடியும். இது விவசாயிகளின் அகால மரணத்தை மட்டும் தடுப்பதற்கான வழிமுறைகள் அல்ல. ஒரு சமூகமே அகால மரணம் அடைவதை தடுப்பதற்கான வழிமுறைகளாகும். 

20 செப்டம்பர், 2016

டாடா முந்த்ரா அனல் மின் திட்டம் - அமெரிக்காவில் வழக்கு

சுற்றுச்சூழல் சட்டவியலின் அடிப்படையாக இரு கோட்பாடுகள் உள்ளன. 
1. முன்னெச்சரிக்கை கோட்பாடு, 
2. சூழலை சீரழிப்பவரே அதனை சீர் செய்ய வேண்டும். 
ஆனால் இதை செயல்படுத்துவதில் அரசுகளும், பெரும் வணிக நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே இந்த சட்டக்கூறுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. 

வளர்ச்சி என்ற பெயரில் சூழல் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்று அரசு அமைப்புகள் கருதுகின்றன. அதேபோல சூழலை சீரழிப்பவருக்கு தண்டனை வழங்காமல் பாதுகாப்பது குறித்தும் அரசு அமைப்புகள் கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக அணுஉலை விபத்துகளுக்கான இழப்பீட்டை தருவதில் அணுஉலை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான பொறுப்பில் இருந்து விடுவிப்பதில் இந்திய அரசு அரசு காட்டும் ஆர்வத்தை பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள சுற்றுச் சூழலியலாளர்கள் பலருக்கும் நீதிமன்றங்கள் என்றால் ஒரு விதமான ஒவ்வாமை உள்ளது. சூழல் பிரச்சினை குறித்து நீதிமன்றத்துக்கு சென்று, நீதிமன்றம் நாம் விரும்பாத ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை ஏறத்தாழ அனைத்து சூழல் ஆர்வலர்களும் எழுப்புவர்.

ஆனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை நிறுவுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்கள் நாள்தோறும் வலுவடையும் நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீதி சார்ந்த சட்டங்களை உருவாக்கி வளர்த்தெடுக்காவிட்டால் அதற்கான இழப்பை நாம்தான் சந்திக்க நேரிடும்.

மனித உரிமை சட்டங்கள் இன்று ஓரளவிற்காவது மக்களுக்கு பயன்படும் அளவில் விரிவடைந்ததற்கு, அத்துறை சார்ந்த ஆர்வலர்களின் தொடர்ந்த சட்ட செயல்பாடுகளே காரணம். மக்களை ஒடுக்கும் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் அரசும், ஆதிக்க சக்திகளும் தொடர்ந்து செய்து வருகின்றன. அதற்கு போட்டியாக,  இந்த தளைகளிலிருந்து மக்களை விடுவிக்கும் சட்டவியலை வளர்த்தெடுப்பதில் மனித உரிமை ஆர்வலர்களும் அயர்வின்றி செயல்பட்டு வருகின்றனர். இதன் விளைவாகவே மனித உரிமை சட்டவியல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

சுற்றுச்சூழல் சட்டவியல் என்பதும் ஒரு வளரும் அறிவியல் துறைதான். சூழல் சட்டவியலும் மக்களுக்கு பயன்படும் அளவில் மாற வேண்டுமானால், சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களையும் போராட்டக்களமாக கருதி களமாடினால் மட்டுமே சாத்தியமாகும்.

இத்தகைய சம்பவம் ஒன்றை பார்ப்போம்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர்கள் என்பதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தேடும் வழக்கு தொடரப்பட்டது அமெரிக்க நீதிமன்றத்தில் என்பதும் முக்கியமான மற்றும் சுவையான அம்சமாகும்.

இந்தியாவிலுள்ள டாடா நிறுவனம் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் முந்த்ரா துறைமுகப் பகுதியில் 17,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. டாடா முந்த்ரா திட்டம் என்று அழைக்கப்படும் கோஸ்டல் குஜராத் பவர் லிமிடெட் (Coastal Gujarat Power Limited) என்ற இந்த நிறுவனத்திற்கு  உலக வங்கியின் மற்றொரு அமைப்பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (International Finance Corporation) கடந்த 2008ம் ஆண்டில் 450 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) கடனாக வழங்கியுள்ளது.

உலக வங்கி பல்வேறு அரசு அமைப்புகளுக்கு கடன் கொடுப்பது அனைவரும் அறிந்ததே. உலக வங்கியின் மற்றொரு முகமான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் வளரும் நாடுகளில் உள்ள தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது. 

1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் தற்போது 184 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தனியார் பெருந்தொழில் கழகங்களுக்கு கடனுதவி அளிப்பதன்மூலமாக 2030ம் ஆண்டில் உலகில் வறுமையை ஒழிக்க இந்த இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் உறுதி பூண்டுள்ளதாக அந்த அமைப்பின் இணைய தளம் தெரிவிக்கிறது. மேலும் சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதில்லை என்பது இந்த நிறுவனத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும்.

இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் கடன் பெற்றுள்ள டாடா முந்த்ரா திட்டம் தொடங்கப்பட்டுள்ள நாவினல் கிராம பஞ்சாயத்தில் சுமார் 800 வீடுகள் உள்ளன. சுமார் 3000 பேர் இந்த கிராமத்தில் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்த்தல், மீன் பிடிப்பு, உப்பு சேகரித்தல் ஆகியவை இப்பகுதி மக்களின் தொழில்களாகும்.

இந்த மின் நிலையம் கடந்த 2012ம் ஆண்டில் உற்பத்தியை துவக்கியபோதே கணிசமானோர் அவர்கள் காலம்காலமாக வசிக்கும் பகுதிகளிலிருந்து இடம் பெயர்க்கப்பட்டனர். தற்போது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளால் அப்பகுதியின் சுற்றுச்சூழலும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மின் உற்பத்தி மையத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 12-13 மில்லியன் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இந்த நிலக்கரி இந்தோனேஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கிட்டங்கிகளில் சேகரிக்கப்பட்டு பின் மின் உற்பத்தி மையத்திற்கு கன்வேயர் பெல்ட்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு நிலக்கரியை சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு சரியாக மூடப்படாத கன்வேயர் பெல்ட்கள் மூலம் கொண்டுவருவதாலும், மின் உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரியின் சாம்பலாலும் காற்று, நிலம், நீர் ஆகிய அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகள், விளை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கரித்துகள்களும், சாம்பல் துகள்களும் நிரம்பி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதி வாழ் மக்களின் முக்கிய தொழில்களான விவசாயமும், மீன்பிடிப்பும் முற்றிலும் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் அஞ்சுகின்றனர். மேலும் அப்பகுதி வாழ் மக்கள் ஆஸ்துமா, தோல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் தெரிகிறது. அண்மைக் காலமாக இறப்பு வீதம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மின் உற்பத்தி மையத்தில் குளிர்விப்பானாக பயன்படும் கடல்நீரை, அவ்வாறு பயன்படுத்திய பின்னர் ஒரு விநாடிக்கு சுமார் 6175 கன அடி நீரை கொதிநிலையில் கடலில் கலக்கும்போது கடலில் வசிக்கும் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இதனாலும் அப்பகுதி மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மேலும் கடல்நீர் நாவினல் கிராமத்தின் நிலத்தடி நீர்வளத்தை அழித்துவிட்டதாகவும், தற்போது குடிநீருக்கு தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவ்வாறான பாதிப்புகள் ஏற்படும் என்பது இந்த மின் திட்டம் அமைவதற்கு முன்பே டாடா நிறுவனத்திற்கும், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனுமதிகளை வழங்கிய அனைத்து அரசுத்துறைகளுக்கும் நன்கு தெரியும். அதேபோல இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கும் இந்தப் பிரசினைகள் நன்கு தெரியும். கடந்த 2007ம் ஆண்டுமுதலே நிதிநிறுவனத்தின் அதிகாரிகள் இந்தப்பகுதியில் பலமுறை ஆய்வு செய்து சமூகப் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து அறிக்கை அளித்துள்ளனர்.

டாடா முந்த்ரா அனல் மின் திட்டத்தால் ஏற்பட வாய்ப்புள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உரிய முறையில் கையாண்டு அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக டாடா நிறுவனம் உறுதி அளித்ததன் பேரில்தான் இந்த கடன் வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் டாடா நிறுவனம் மேற்கொள்ளவில்லை. கடன் வழங்கிய இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனமும் இதை கண்டுகொள்ளவில்லை.

மேலும் இந்தோனேஷியாவிலிருந்து மிகக்குறைவான சாம்பலை வெளியிடும் உயர்தர நிலக்கரியை இறக்குமதி செய்வதன் மூலம் மலிவான விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று டாடா நிறுவனம் கூறி வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் நிலக்கரிக்கான விலையை இந்தோனேஷியா அரசு அதிகரித்துள்ளது. எனவே அதிகளவில் சாம்பலை வெளியிடும் தரக்குறைவான நிலக்கரியை டாடா நிறுவனம் பயன்படுத்துகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள “எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல்” (Earth Rights International) என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு இப்பகுதி மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக புதுமையான சட்ட முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதியின் உள்ளாட்சி நிர்வாகமான நவினல் பஞ்சாயத்து மற்றும் மீனவர்கள் தொழிற்சங்கமான மச்சிமார் அதிகார் சங்கார்ஷ் சங்காதன் ஆகியவற்றின் உதவியுடன் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சார்பாக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள்தான் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. 

இந்த நிதிநிறுவனம் கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளை முறையாக பின்பற்றி இருந்தால், முந்த்ரா பகுதி மக்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த திட்டத்திற்கு கடன் அளித்ததன் மூலம் இத்திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கு, அறிவுரை கூறுவதற்கு, அந்த அறிவுரைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு நிதி நிறுவனத்திற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களை நிதிநிறுவனம் உரியமுறையில் பயன்படுத்தி இருந்தால் அப்பகுதி மக்களுக்கு இத்தனை இழப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே நெறிமுறைகளை உரியமுறையில் கடைபிடிக்காமல் டாடா நிறுவனத்திற்கு கடனுதவி வழங்கியதன் மூலம் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்த இன்டர்நேஷனல் ஃபைனானஸ் கார்ப்பரேஷன், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் 75,000 அமெரிக்க டாலர்கள் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது. இத்துடன் இப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கான மருத்துவ உதவிக்கான செலவுத்தொகையை இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஏற்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது. மேலும் டாடா முந்த்ரா மின் உற்பத்தி நிலையம் தொடர்ந்து இயங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2016 மார்ச் மாதம், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசுகளுக்கு எதிராக அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது. இத்தகைய “வழக்கு தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்பு” (Absolute Immunity), பன்னாட்டு நிதியுதவி அமைப்பான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கும் உள்ளது. எனவே இந்த வழக்கை கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க இயலாது என்ற உலக வங்கியின் வாதத்தை ஏற்று இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனினும் இந்த வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லவிருப்பதாக இந்த வழக்கின் மனுதாரர்களும், எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் முதல் சுற்றிலேயே வெற்றி கிடைக்காது என்று தெரிந்தே இந்த வழக்கு தொடர்ந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே Atkinson Vs. Inter-American Development Bank என்ற வழக்கில் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்ற வாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வெளிநாட்டு அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கை எடுக்கும்போது அந்த அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடும் உலக வங்கியின் துணை அமைப்புகளுக்கு இந்த “வழக்கு தொடுப்பதற்கு எதிரான பாதுகாப்பு” செயல்படாது என்றும் மனுதாரர்களும், அவர்களது சட்ட நிபுணர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, சமூக வளர்ச்சியை பலியிட முடியாது. மேலும் இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், வளரா நாடுகளில் வறுமையை ஒழிப்பதாக கூறிக்கொண்டு இயற்கை வளங்களை சீரழிக்கும் திட்டங்களுக்கு உதவி செய்வதை ஏற்க முடியாது.  எனவே கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீட்டு  நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர இறுதிவரை முயற்சி செய்வோம் என்று எர்த் ரைட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் நீதி தொடர்பான வழக்குகளின் முதற்கட்ட தோல்வியில் துவண்டு, செயலற்று இருந்துவிட்டால் சுற்றுச்சூழல் சட்டவியல் வளர்ச்சி அடையாமல் தேங்கி நின்று விடக்கூடும். சட்டரீதியான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்வந்தால் மட்டுமே சுற்றுச்சூழல் சட்டவியலை வளர்த்தெடுக்க முடியும்.

(பூவுலகு, செப்டம்பர் 2016 இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை)